/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்
/
அவிநாசியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்
ADDED : ஆக 30, 2025 12:44 AM

அவிநாசி; அவிநாசியில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
அவிநாசி சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில், ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது.
நேற்று சிலைகள் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. 35வது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்று விசர்ஜனம் செய்ய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
நேற்று மாலை சேவூர் ரோடு, வ.உ.சி., திடலில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் கேசவன் முன்னிலை வகித்தார். வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.,தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் கணியாம்பூண்டி செந்தில் உள்ளிட்டோர் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஹிந்து முன்னணி மாநில நிர்வாகி நடிகர் ரஞ்சித் பேசுகையில், ''இன்றைய இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழக்கின்றனர். இதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும். ஹிந்து அமைப்புகள் இதற்கு கைகோர்க்க வேண்டும். ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் அழிவு சக்திகளை கண்டறிந்து அகற்ற வேண்டும். ஹிந்து என்ற உணர்வுடன் நாம் நம்மை ஆள்வோருக்கு ஓட்டுப் போட வேண்டும்,'' என்றார்.
ஊர்வலத்தை ஈஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். விநாயகர் சிலைகள், சிறுமுகை அருகே பவானி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டது. அவிநாசி டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.