/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தோட்டத்து வீடுகளை குறி வைக்கும் கொள்ளையர் கூட்டம்; கிராம பாதுகாப்பு பிரிவு உருவாக்க திட்டம்
/
தோட்டத்து வீடுகளை குறி வைக்கும் கொள்ளையர் கூட்டம்; கிராம பாதுகாப்பு பிரிவு உருவாக்க திட்டம்
தோட்டத்து வீடுகளை குறி வைக்கும் கொள்ளையர் கூட்டம்; கிராம பாதுகாப்பு பிரிவு உருவாக்க திட்டம்
தோட்டத்து வீடுகளை குறி வைக்கும் கொள்ளையர் கூட்டம்; கிராம பாதுகாப்பு பிரிவு உருவாக்க திட்டம்
ADDED : மே 14, 2025 06:31 AM
திருப்பூர்; தோட்டத்து வீடுகளில் வசிப்போரை குறி வைத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அதை தடுக்க, கிராம இளைஞர்களை இணைத்து, கிராம பாதுகாப்பு பிரிவு துவக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசாருடன் இணைய, விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்களும் தயாராகி வருகின்றனர்.
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், நகரை விட்டு ஒதுக்குப்புறமாக உள்ள கிராமப்புற தோட்டத்து வீடுகளில் நோட்டமிட்டு, வீடு புகுந்து திருடும் சம்பவம், சமீபத்தில் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில், வீடுகளில் வசிப்போரை கொலை செய்து, கொள்ளையில் ஈடுபடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.
எனவே, 'தோட்டத்து வீடுகளில் வசிப்போரின் பாதுகாப்பு கருதி, அவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்; போலீசாரின் இரவு ரோந்து, அதிகப்படுத்தப்பட வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போதைய சூழலில், ஊரக பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசாரின் எண்ணிக்கை மிகக்குறைவு; அதுவும் இரவு ரோந்து பணியில், 2, 3 போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், குற்றச் செயல்களை கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது போன்றவை பெரும் சவாலான பணியாக மாறியிருக்கிறது.
எனவே, அந்தந்த கிராமங்களில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து, கிராம பாதுகாப்பு பிரிவு துவக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிராமங்களில் புதிய நபர்கள் நடமாட்டம், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை போலீசாரின் கவனத்துக்கு இளைஞர்கள் கொண்டு செல்லும் போது, போலீசார் 'அலர்ட்' நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.
இதன் வாயிலாக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி, தடுக்க முடியும் என, போலீசார் எதிர்பார்க்கின்றனர். போலீசாருடன் இணைந்து பணியாற்ற விவசாய அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களும் தயாராகி வருகின்றனர்.
துஷ்பிரயோகம் கூடாது!
மக்கள் தொகை, குடியிருப்புகளின் எண்ணிக்கைகேற்ப கண்காணிப்பு மேற்கொள்ள போதிய போலீசார் இல்லாத நிலையில், ஏற்கனவே, 'போலீஸ் - நண்பர்கள் குழு' ஏற்படுத்தினர்; பல இடங்களில், போலீசாருடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, இளைஞர்கள் சிலர் தவறான செயல்களில் ஈடுபட துவங்கினர்; தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய துவங்கினர். இதன் காரணமாக தான், போலீஸ் - நண்பர்கள் குழுவின் செயல்பாடு முடங்கியது. தற்போது கிராம பாதுகாப்பு பிரிவு துவங்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் இணையும் இளைஞர்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.