/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கேங்மேன்' பணியாளர்கள் போராட்டம்
/
'கேங்மேன்' பணியாளர்கள் போராட்டம்
ADDED : நவ 14, 2024 08:36 PM
உடுமலை ; உடுமலையில் பணிப்பாதுகாப்பு வழங்க கோரி மின்வாரிய அலுவலகத்தை, 'கேங்மேன்' பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.
உடுமலை ஏரிப்பாளையத்தில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று காலை 'கேங்மேன்' பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'உடுமலை நகரம் செல்லம் குடியிருப்பு இந்து நகரில், மின்தடை ஏற்பட்டது. மின்தடைக்கு காரணமாக இருந்த, மரக்கிளைகளை அகற்றியதற்கு, நுகர்வோர் தரப்பில், போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்'.
'இவ்வாறு, அவசர மற்றும் பேரிடர் கால பணிகளை மேற்கொள்ளும் போதும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர் கதையாக உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் பணிப்பாதுகாப்புக்கு உறுதி கொடுக்க வேண்டும்,' என்றனர்.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகி மாரிமுத்து மற்றும் 'கேங்மேன்' பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், 'பணிப் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும். பணி செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது, மின்வாரியம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்படும். பணியாளர்கள் இதர கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும், 'என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.
பணியாளர்கள் போராட்டத்தால், மின்வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.