/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டும் பிரச்னை: முதல்வருக்கு 1,800 இ-மெயில்
/
குப்பை கொட்டும் பிரச்னை: முதல்வருக்கு 1,800 இ-மெயில்
குப்பை கொட்டும் பிரச்னை: முதல்வருக்கு 1,800 இ-மெயில்
குப்பை கொட்டும் பிரச்னை: முதல்வருக்கு 1,800 இ-மெயில்
ADDED : நவ 03, 2025 11:58 PM
பல்லடம்: திருப்பூர் அருகே, இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளைக் கொட்டி திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வரும் சூழலில், இடுவாய், கரைப்புதுார், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இதற்கிடையே, மாநகராட்சி நிர்வாகம், பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், கிராம மக்கள், இ-மெயில் மூலம், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதில் கூறியிருப்பதாவது:
இடுவாய் கிராமத்தில், முன்னோர்களால், சமூக நலன் கருதி தானமாக வழங்கப்பட்ட நிலத்தில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.
கிராமப் பகுதியில், திருப்பூர் நகர கழிவுகளை கொட்டக்கூடாது என கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், பொது சுகாதாரத்துக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் பணியை, மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அறிவியல் பூங்கா, பி.ஏ.பி., வாய்க்கால் மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகே, குப்பைகளைக் கொட்டி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தமாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
கிராமத்தின் இயற்கை வளத்தையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, விரைவான நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பின்னும், மாநகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே, கிராம பகுதிகளில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நான்கு ஊராட்சி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தமிழக முதல்வருக்கு தனித்தனியாக இ- மெயில் அனுப்பி வருகின்றனர்.
இன்று (நேற்று) 1,800க்கும் அதிகமான இ--மெயில் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, 3 நாட்கள் இதேபோல் மெயில் அனுப்பப்படும். விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வரே இவ்விஷயத்தில் தலையிட்டு, குப்பை கொட்டும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்,'' என்றனர்.

