/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டும் பிரச்னை; கலெக்டரை சந்திக்க முடிவு
/
குப்பை கொட்டும் பிரச்னை; கலெக்டரை சந்திக்க முடிவு
ADDED : ஜூலை 09, 2025 10:58 PM
அனுப்பர்பாளையம்: நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு காண, கலெக்டரை சந்திக்க அப்பகுதியினர் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் அடுத்த ஜி.என்., கார்டன் பத்திர பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சந்தித்த மேயர் தினேஷ்குமார், ''குப்பை கொட்டும் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.
அதற்கு பொதுமக்கள், இங்கு குப்பை கொட்ட மாட்டோம் என உறுதி அளிக்குமாறு கேட்டனர். அதற்கு மேயர் எந்த பதிலும் கூறாததால், மக்கள் அவரை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், நாளை (நேற்று) காலை பதில் கூறுவதாக கூறி புறப்பட்டு சென்றார். அவ்வாறு நேற்று காலை அப்பகுதி பொதுமக்களை தொடர்பு கொண்ட மேயர், '10 நாட்கள் மட்டும் குப்பை கொட்டப்படும்,' என்று கூறி உள்ளார். ஆனால், அதனை ஏற்காத அப்பகுதி மக்கள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து நேற்று இரவு ஆலோசனை மேற்கொண்டனர்.
அதில், காலை கலெக்டரை சந்தித்து குப்பை கொட்ட அளித்த அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை வைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டது.