/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலவரத்தில் முடிந்த குப்பை விவகாரம்; பல்லடம் அருகே கிராமத்தில் பரபரப்பு
/
கலவரத்தில் முடிந்த குப்பை விவகாரம்; பல்லடம் அருகே கிராமத்தில் பரபரப்பு
கலவரத்தில் முடிந்த குப்பை விவகாரம்; பல்லடம் அருகே கிராமத்தில் பரபரப்பு
கலவரத்தில் முடிந்த குப்பை விவகாரம்; பல்லடம் அருகே கிராமத்தில் பரபரப்பு
ADDED : டிச 17, 2025 05:55 AM

பல்லடம்: திருப்பூர் அருகே, இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, நான்கு கிராம மக்கள் போராடி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், மாநகராட்சி தேர்வு செய்துள்ள இடத்தின் ஒரு பகுதியில் மட்டும் குப்பை கொட்ட ஐகோர்ட் அனுமதித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, குப்பை லாரிகள், நேற்று சின்னக்காளிபாளையம் கிராமத்திற்குள் வந்தன. மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். மாநகராட்சி கிடங்கையும் முற்றுகையிட்டனர்.
போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொதுமக்களை, போலீசார், குண்டுக்கட்டாக கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில், ஒருவர் மண்டை உடைந்தது. மூவருக்கு கை விரல், காலில் முறிவு ஏற்பட்டது. அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும் மயக்கமடைந்தார்.
தள்ளுமுள்ளில், கே.வி.ஆர்.நகர் போலீஸ் உதவி கமிஷனர் ஜான், தெற்கு இன்ஸ் பெக்டர் கணேஷ் உட்பட நான்கு போலீசார் காயமடைந்தனர். இதனால், சின்னக்காளிபாளையம் கிராமம் நேற்று கலவர பூமியானது.
மக்களிடம், போலீசார் பேசுகையில், 'கோர்ட் உத்தரவை செயல்படுத்துவது எங்கள் பணி. எங்களிடம் வீண் விவாதம் வேண்டாம்' என்றனர்.
மக்கள் கூறுகையில், 'குப்பையை தரம் பிரித்து, பேக் செய்து கொண்டு வர, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், ஒட்டுமொத்தமாக கொண்டு வந்துள்ளனர். கோர்ட் அறிவுறுத்தலை பின்பற்றாமல் விதிமீறி குப்பை கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை கொட்ட விட மாட்டோம்' என்றனர்.

