/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் விவசாயிகளின் தொடர் பிரச்னைகளை... அரசு கவனிக்குமா? உலர்களம் கூட இல்லாமல் தவியாய் தவிப்பு
/
நெல் விவசாயிகளின் தொடர் பிரச்னைகளை... அரசு கவனிக்குமா? உலர்களம் கூட இல்லாமல் தவியாய் தவிப்பு
நெல் விவசாயிகளின் தொடர் பிரச்னைகளை... அரசு கவனிக்குமா? உலர்களம் கூட இல்லாமல் தவியாய் தவிப்பு
நெல் விவசாயிகளின் தொடர் பிரச்னைகளை... அரசு கவனிக்குமா? உலர்களம் கூட இல்லாமல் தவியாய் தவிப்பு
ADDED : டிச 17, 2025 06:01 AM

உடுமலை: நெல் சாகுபடி பிரதானமாக உள்ள அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில், விவசாயிகளின் கோரிக்கையான உலர்களம் மற்றும் இருப்பு வைக்க குடோன் வசதியை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், விவசாயிகள் மாற்றுச்சாகுபடிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், அமராவதி அணை பாசனத்துக்கு நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்திலுள்ள, முக்கிய நன்செய் நில கேந்திரங்களில், அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியும் ஒன்றாகும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில், நெல் விவசாயிகளுக்கான பல்வேறு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
குமரலிங்கம், கண்ணாடிப்புத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு பகுதிகளில், 4,686 ஏக்கர் நிலங்களில், முன்பு முப்போகம் நெல் சாகுபடியாகி வந்தது. அருகிலுள்ள பகுதிகளையும் சேர்த்து, ஆண்டுக்கு இரு போகங்களில், 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆனால், நெல்லை காய வைக்க போதிய உலர்கள வசதி இல்லை. குமரலிங்கத்திலுள்ள உலர்களத்தை குறைந்தளவு விவசாயிகளே பயன்படுத்த முடியும்.அறுவடைக்குப்பிறகு, ஈரப்பதம் இல்லாமல் நெல்லை விற்பனை செய்ய, இத்தகைய உலர்களங்கள் முக்கிய தேவையாக உள்ளது.
குறுகலான இடங்களில், நெல்லை குவிய வைத்து, விற்பனை செய்வதால், ஈரப்பதம் அதிகரித்து போதிய விலை கிடைப்பதில்லை. ரோடுகளிலும், விளைநிலங்களில் தார்ப்பாய் விரித்து நெல்லை காய வைத்தாலும் போதிய பலன் இருப்பதில்லை.
இதனால், ஒவ்வொரு சீசனிலும் கிடைத்த விலைக்கு, நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.
கடந்த சீசனில், அறுவடையின் போது மழை பெய்ததால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது; அதிக ஈரப்பதம் காரணமாக நெல் முளைவிடும் நிலை ஏற்பட்டது.
அரசு நடவடிக்கை இல்லை இப்பிரச்னைக்கு தீர்வாக, கிராமந்தோறும், வேளாண் விற்பனை வாரியம் மற்றும் இதர துறைகளின் கீழ் உலர்களங்கள் கட்டித்தர வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விலை வீழ்ச்சி காலங்களில், நெல்லை இருப்பு வைத்து விற்பனை செய்யவும் விவசாயிகள் முயற்சி செய்வதில்லை. போதிய குடோன்கள் இல்லாதது இதற்கு முக்கிய காரணமாகும். ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு, விளைபொருளை எடுத்துச்செல்ல கூடுதல் செலவாகிறது. எனவே, ஒவ்வொரு கிராமத்திலும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், நெல் இருப்பு வைக்க, கிராம கிட்டங்கி அமைக்கவும் தொடர் கோரிக்கை உள்ளது.
இத்தகைய குடோன்களில் நெல்லை இருப்பு வைத்தால், சம்பந்தப்பட்ட வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக ஈட்டுக்கடன் பெற முடியும்.
கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் விவசாயிகள் ஆர்வலர்கள் குழுக்கள் வாயிலாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, நெல் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்.
இல்லாவிட்டால், பாதுகாக்கப்பட்ட நன்செய் நில கேந்திரமான குமரலிங்கம் சுற்றுப்பகுதியில், விவசாயிகள் நெல் சாகுபடியை கைவிட்டு மாற்று சாகுபடிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். மடத்துக்குளம் தாலுகாவில், பி.ஏ.பி., மற்றும் அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதியில், தற்போது பரவலாக மக்காச்சோளம் சாகுபடி செய்யத்துவங்கியுள்ளனர்.
இச்சாகுபடியில் அறுவடைக்கு பிறகு, மக்காச்சோளத்தை காய வைத்த பிறகே விற்பனை செய்ய முடியும். தற்போது, கிராமப்புற ரோடுகளில், மக்காச்சோளத்தை காய வைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

