/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2 ஊராட்சிகளுக்கும் தொல்லையான எல்லை நெடுஞ்சாலையோரம் குப்பை 'மலை'
/
2 ஊராட்சிகளுக்கும் தொல்லையான எல்லை நெடுஞ்சாலையோரம் குப்பை 'மலை'
2 ஊராட்சிகளுக்கும் தொல்லையான எல்லை நெடுஞ்சாலையோரம் குப்பை 'மலை'
2 ஊராட்சிகளுக்கும் தொல்லையான எல்லை நெடுஞ்சாலையோரம் குப்பை 'மலை'
ADDED : நவ 10, 2024 04:32 AM

அவிநாசி : அவிநாசி அருகே செம்பியநல்லுார் ஊராட்சி, ஆட்டையாம்பாளையம் பகுதியில், அவிநாசி - கோவை நெடுஞ்சாலையோரம் மக்காத கழிவுகள், பஞ்சு கழிவுகள், வீட்டில் சேகரமாகும் காய்கறி குப்பை கழிவுகள் என பலவிதமான கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர்.
பல வாரங்களாக குப்பைகள் அள்ளப்படாததால் பாலிதீன் பைகள், கவர்கள் காற்றில் பறந்து டூவீலர் மற்றும் நடந்து செல்பவர்களின் முகத்தின் மீது விழுகின்றன.
நோய் தொற்று ஏற்படுவதுடன் ஒரு சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இறைச்சிக்கடை, பேக்கரி, மளிகை கடை, உணவகம் என பலதரப்பட்ட கடைகள் உள்ளன.
அவற்றில் இருந்து கொட்டப்படும் கழிவுகள் மற்றும் அந்தப் பகுதியில் செயல்படும் நிறுவனங்களில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகள் என ஒட்டுமொத்தமாக சேகரமாகி அந்தப் பகுதியே குப்பை சேகரிக்கும் கிடங்காக மாறி உள்ளது.
பல வாரங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் குடியிருப்புகளில் ஈக்கள் - கொசுக்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த முருகேசன் உட்பட சிலர் கூறியதாவது:
ஆட்டையாம்பாளையம் பகுதியில் குப்பை சேகரிக்க ஆட்கள் வருவதில்லை. இதனாலேயே இந்த பகுதி முழுவதும் குப்பை கழிவுகள் கொட்டிக் கிடக்கும் கிடங்காக மாறி உள்ளது. வேலாயுதம்பாளையம், செம்பியநல்லுார் ஆகிய இரு பஞ்சாயத்துக்குட்பட்ட இடைப்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை கழிவுகளை யார் அள்ளுவது என்ற பிரச்னை பல காலமாக நீடித்து வருகிறது. இதனாலேயே இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.
மேலும் ஊராட்சி நிர்வாகமே குப்பை அள்ளுவதற்கு சங்கடப்பட்டு ஒரு சில நாட்களில் இரவு நேரங்களில் குப்பை கழிவுகளுக்கு தீயை வைத்து விடுகின்றனர். அப்போது இந்த பகுதி முழுவதுமாக புகை மண்டலமாக காட்சியளிக்கும். அதனால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து செம்பியநல்லுார் ஊராட்சி தலைவர் சுதா கூறியதாவது:
அப்பகுதியில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறது. அந்தப் பகுதியில் வேலாயுதம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட கடைக்காரர்கள் மட்டுமே குப்பையை கொட்டி வருகின்றனர்.
பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என அறிவுறுத்தல் செய்யப்பட்டது.
ஆனாலும், தொடர்ந்து குப்பை கொட்டுகின்றனர். நாங்கள் எவ்வளவோ தடுத்தும் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் இந்தப் பக்கம் கொண்டு வந்து இரவு நேரங்களில் குப்பையை கொட்டி விட்டு செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.