/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட நிறைவு; தொகை தாமதமின்றி வழங்கப்படுமா?
/
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட நிறைவு; தொகை தாமதமின்றி வழங்கப்படுமா?
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட நிறைவு; தொகை தாமதமின்றி வழங்கப்படுமா?
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட நிறைவு; தொகை தாமதமின்றி வழங்கப்படுமா?
ADDED : செப் 15, 2025 09:35 PM
உடுமலை; சமூக நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், நிறைவு தொகையை தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், சமூக நலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டமும் உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியும், இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர், குழந்தைகளின் மூன்று வயது நிறைவுபெறுவதற்குள் திட்டத்தில், பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆண் வாரிசு இல்லாமலும், பெற்றோருக்கு திருமண வயது நிறைவடைந்தும் இருப்பதும் அவசியம். இக்குழந்தைகளுக்கு, அரசின் சார்பில் வைப்பு தொகையாக, தலா 15 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது.
தவிர, குழந்தைகளின் ஆறு வயது முதல் 15 வயது வரை குறைந்தபட்சமாக, 150 ரூபாய் முதல் ஆண்டுதோறும் வட்டியும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது, அதற்கான விதிமுறைகளையும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகளுக்கு, 18 வயது நிறைவடையும் தருணத்தில், அவர்களுக்கான தொகை வழங்கப்படும். குறைந்தபட்சமாக 30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், 18 வயது நிறைவுபெறாமல், அந்த குழந்தைகள் திருமணம் செய்துகொண்டாலும், திட்டத்தில் பயன்பெற முடியாது. பயனாளிகளாக உள்ளவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே முதிர்வு தொகையை பெற முடியும்.
திருப்பூர் மாவட்டத்தில் நிறைவுத்தொகை பெறுவதற்கு, நீண்ட நாட்களாக பயனாளிகள் காத்திருக்கின்றனர். இத்திட்டத்தில் பெரும்பான்மையான விண்ணப்பதாரர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர். உயர்கல்வி, திருமணம் போன்றவற்றுக்கான நிறைவு தொகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இத்தொகையை தாமதமில்லாமல் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.