/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குங்க!
/
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குங்க!
ADDED : செப் 20, 2024 10:09 PM
உடுமலை : பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்க தொகையை உடனடியாக வழங்க வேண்டும், என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, பால் வழங்கும் விவசாயிகளுக்கு, லிட்டர் ஒன்றுக்கு, 3 ரூபாய் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கி வந்தது.
கடந்த இரு மாதமாக இந்த ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பாதித்து வருகின்றனர். தவிடு, புண்ணாக்கு, பருத்தி விதை, கலப்பு தீவனம், சோளத்தட்டை உள்ளிட்டு கால்நடைகளுக்கு தேவையான இடுபொருட்கள் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு உரிய தொகை கிடைக்காத நிலையில், ஊக்கத்தொகையும் நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் உடனடியாக, கொள்முதல் செய்யும் பாலுக்குரிய ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை மனுவை, திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் சுஜாதாவிடம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் கொளந்தசாமி மற்றும் விவசாயிகள் வழங்கினர்.