/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுங்க! வறட்சியை நீக்க கோரிக்கை
/
உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுங்க! வறட்சியை நீக்க கோரிக்கை
உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுங்க! வறட்சியை நீக்க கோரிக்கை
உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுங்க! வறட்சியை நீக்க கோரிக்கை
ADDED : ஆக 10, 2025 10:29 PM

உடுமலை,; குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தாராபுரம் தாலுகா கெத்தல்ரேவ் பகுதியில் அமைந்துள்ள உப்பாறு அணை, பி.ஏ.பி., பாசன திட்டத்தில், கசிவு நீர் அணையாக, கட்டப்பட்டது.
இந்த அணை, 572 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். அணையிலிருந்து நேரடியாக, 6,060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் செல்ல கால்வாய் வசதி இல்லை.
மாறாக, அரசூர் ஷட்டரில் இருந்து, இயற்கையாக அமைந்த உப்பாறு ஓடை வழியாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது. ஷட்டரில் இருந்து, உப்பாறு அணை, 46 கி.மீ., தள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் தண்ணீர் செல்லும் ஓடை பராமரிக்கப்படாமல், சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவல நிலையில் உள்ளது. எனவே, வழியோரத்திலுள்ள தடுப்பணைகளுக்கு கூட போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனால், உப்பாறு ஓடை படுகையில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, பல்வேறு பாதிப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். ஆண்டில் பல மாதங்கள் அப்பகுதியில் வறட்சி நிலவுகிறது.
போதிய நீர்பிடிப்பு பகுதிகள் இல்லாததால், அணையில் நீர்மட்டம் எப்போதும் குறைவாகவே உள்ளது.
உப்பாறு படுகை விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கும் ஓடை பரிதாப நிலையில் உள்ளது.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, பி.ஏ.பி., திட்டத்தில் பாசன நீர் பெற்றாலும், அணைக்கு முழுமையாக தண்ணீர் சென்று சேர்வதில்லை. ஓடை சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பரிதாப நிலையில் உள்ளது.
பொதுப்பணித்துறையினர் ஓடையை மீட்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதே போல், அமராவதி ஆற்றில் மழைக்காலங்களில் உபரியாக செல்லும் தண்ணீரை உப்பாறு அணைக்கு திருப்புவதற்கான சாத்தியகூறுகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
உப்பாறு அணைக்கு தண்ணீர் கிடைத்தால், சுற்றுப்பகுதியிலுள்ள நுாற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.