ADDED : செப் 28, 2025 08:09 AM

திருப்பூர் : புதர்மண்டி காணப்படும் நல்லாற்றை துார்வாரி சுத்தப்படுத்த, தன்னார்வ பொதுநல அமைப்பினராவது முன்வர வேண்டும் என, பசுமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை மாவட்டம், அன்னுாரில் துவங்கி அவிநாசி வழியாக, திருப்பூர் நகருக்குள் வரும் நல்லாறு, முழுவதும், மாநகராட்சி சாக்கடை கழிவுநீர் பாயும் ஓடையாக மாறிவிட்டது. அவிநாசி ரோடு, பி.என்., ரோடு பகுதிகளை கடந்து செல்லும் நல்லாறு, அதிக அளவு புதர்மண்டி காடு போல் காணப்படுகிறது. இதனால், சாக்கடை தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
குறிப்பாக, மாநகராட்சி எல்லையில், நல்லாறு பாயும் இடங்களில், எங்கு பார்த்தாலும் துர்நாற்றம் வீசுகிறது. இதே நிலையில் இருந்த நொய்யலை, பல்வேறு அமைப்பினரும் கரம் கோர்த்து, மீண்டும் மீட்டெடுத்து விட்டனர். அதேபோல், திருப்பூரை தேடி வந்து, குளமாகதேங்கி, பிறகு நொய்யலில் இணையும் நல்லாற்றையும் மீட்டெடுக்க வேண்டும்.
இதுகுறித்து பசுமை ஆர்வலர்கள் கூறியதாவது:
திருப்பூரின் வடக்கு பகுதியில் உள்ள நல்லாற்றையும், ரோட்டரி, லயன்ஸ், தொழில் அமைப்பினர் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து, துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.
ஒருமுறை சுத்தப்படுத்தி, 'பேபி' வாய்க்கால் அமைத்தால், நீண்ட நாட்களுக்கு நல்லாற்றை துாய்மையாக பராமரிக்க முடியும். கழிவுநீர் தேங்காமல், ஓடிக்கொண்டே இருக்க ஏதுவாக, 'பேபி' வாய்க்கால் அமைக்க வேண்டும். நல்லாற்றுக்கும் நல்ல வழிகாட்ட மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.