/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.எஸ்.டி., குறைப்பு சாதகம்! தொழில் சிறக்கும்
/
ஜி.எஸ்.டி., குறைப்பு சாதகம்! தொழில் சிறக்கும்
ADDED : செப் 04, 2025 11:31 PM

திருப்பூர்: மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சிலின் வரி மறுசீரமைப்பு நடவடிக்கையால், தொழிலுக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
ஜி.எஸ்.டி., வரி விகித அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 12, 28 சதவீதங்கள் நீக்கப்பட்டு, வரும் 22ம் தேதி முதல், 5, 18 சதவீதம் ஆகிய இரண்டு விகிதங்கள் மட்டும் அமலுக்கு வருகிறது.
மிகப்பெரிய ஆறுதல்
திருப்பூர் ஏற்றுமதி நிட் பிரின்டர்ஸ் சங்க(டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த்:
சாயங்களுக்கு 18 சதவீதமும், பிரின்டிங் கட்டணத்துக்கு 5 சதவீத வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. இதனால், பிரின்டிங் நிறுவனங்களுக்கு, சாயங்கள் கொள்முதலின்போது, வரி என்கிற பெயரில் பெரிய தொகை தேக்கமடைந்துவிடுகிறது. பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான சாயம் கொள்முதலின்போது, 1.80 லட்சம் ரூபாய் வரியாக செலுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது, சாயங்களுக்கான வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது, பிரின்டிங் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
பெரிய பாரம் குறைந்தது
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம்:
பாலியஸ்டர் இழை, பாலிபேக், அட்டைப்பெட்டி என, ஆடை உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ரீபண்ட் கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களால், ஜி.எஸ்.டி., என்பது, குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தியாளர்களுக்கு பெரிய முதலீடாகவே இருந்துவருகிறது. வரி விகிதங்கள் குறைக்கப்பட்டிருப்பதால், நிறுவனங்களுக்கு பெரிய பாரம் குறைந்து ள்ளது. வரிக்காக செலுத்திவரும் தொகையை பயன்படுத்தி அதிக மூலப்பொருள் கொள்முதலுக்கு செய்து, ஆடை உற்பத்தியை அதிகரிக்கச் செய்யமுடியும்.
ஆடை விலை குறைய வாய்ப்பு
தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க (சிம்கா) தலைவர் விவேகானந்தன்:
ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பால், பருத்தி நுால் போலவே, பாலியஸ்டர், செயற்கை இழைகளுக்கான வரியும் 5 சதவீதமாக குறைவதால், உற்பத்தி செலவு குறையும். இதனால், ஆடைகளின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. தொழில்துறையினர் அதிக வரி செலுத்திவிட்டு, உள்ளீட்டு வரியை திரும்ப பெறமுடியாமல் இருப்பில் வைக்கும் சிக்கல் ஏற்படாது. ஒட்டுமொத்த திருப்பூருக்கும் பயன்தரும்.
உள்நாட்டு சந்தை வாய்ப்பு பிரகாசமாவதற்கு உதவும்
ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பு, ஆடை உற்பத்தி துறையினருக்கு நல்ல பலனை அளிக்கும்வகையில் அமைந்துள்ளது. ஒரு ஆடையின் மதிப்பு ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 12 சதவீத வரி விதிக்கப்பட்டுவருகிறது; 12 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளதால், 2500 ரூபாய்க்கு கீழ் உள்ள ஆடைகளுக்கு 5 சதவீதமும்; அதற்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 18 சதவீத வரி அமலுக்கு வருகிறது. உற்பத்தியில், ஒரு ஆடையின் மதிப்பு 2500 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவுதான்.
கடந்த பிப்., பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு, 7ல் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, நடுத்தர மக்கள் நுகரும் பொருட்களுக்கான வரி 5 சதவீதம்; குறைந்த திறனுள்ள கார்களுக்கான வரி, 28ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை எட்டிவிட்டது. அதாவது, உள்நாட்டிலேயே மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவுக்கான வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய, வேறு புதிய நாடுகளின் சந்தை வாய்ப்புகளை பெறுவதென்பது, நீண்ட கால நடவடிக்கை.
உள்நாட்டு சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதன்மூலம், நெருக்கடி சூழல்களை, திறம்பட எதிர்கொள்ளமுடியும். வருமான வரி உச்சவரம்பு சீரமைப்பு, ஜி.எஸ்.டி., வரி மறு சீரமைப்பு மூலம், உள்நாட்டில் மக்களின் பொருட்கள் நுகர்வை அதிகரிக்கச் செய்ய முடியும். தீபாவளி நெருங்கும்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை, உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருட்கள் நுகர்வில் எதிர்பார்க்கும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
- தனஞ்செயன், ஆடிட்டர்.
நம் தேசம் முன்னிலை பெறும்
மத்திய அரசின் ஜி.எஸ்.டி., குறைப்பு நடவடிக்கை, திருப்பூர் பின்னலாடை துறைக்கு மிகப்பெரிய பலன்தரப்போகிறது. ஆயிரம் ரூபாய்க்கு மேலான ஆடைக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி., இருந்தது; தற்போது, 2500 ரூபாய் விரையிலான அனைத்து ஆடைகள், காலணிக்கும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆடைகள் விலை குறைந்து, சாதாரண மக்களுக்கு டி-சர்ட், உள்ளாடை ரகங்கள் மலிவாக கிடைக்கும். கடைகளில் ஆடை வர்த்தகம் அதிகரிக்கும். திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில், குறு, சிறு நிறுவனங்களுக்கு சுமை குறையும். பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளுடனான போட்டியில், இந்தியாவுக்கு முன்னிலை கிடைக்கும்.
2500 ரூபாய்க்கு மேல் விலையுள்ள ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரி 18 சதவீதமாகியுள்ளது. அதனால், திருமண உடை, பிராண்டட் விளையாட்டு ஆடை போன்ற பிரீமியர் ஆடைகள் விலை உயரும். அனைத்து ஆயத்த ஆடைகளுக்கும் 5 சதவீத வரி விதிப்பு இருந்தால் சிறப்பாக இருக்கும்.
- ஜெய்பிரகாஷ், ஸ்டார்ட் அப் இந்தியா ஆலோசகர்.