/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணைகளின் நீர்மட்டம் உயர்வதால்... மகிழ்ச்சி!தொடர் மழையால் வரத்து அதிகரிப்பு
/
அணைகளின் நீர்மட்டம் உயர்வதால்... மகிழ்ச்சி!தொடர் மழையால் வரத்து அதிகரிப்பு
அணைகளின் நீர்மட்டம் உயர்வதால்... மகிழ்ச்சி!தொடர் மழையால் வரத்து அதிகரிப்பு
அணைகளின் நீர்மட்டம் உயர்வதால்... மகிழ்ச்சி!தொடர் மழையால் வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 19, 2025 10:16 PM

உடுமலை: பருவமழை சீசன் துவக்கத்திலேயே நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்து வரும் கனமழையால், திருமூர்த்தி, அமராவதி அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. சாகுபடிக்கு கைகொடுக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள, அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சீசனில், நீர்வரத்து அதிகம் கிடைக்கிறது.
கடந்த சில நாட்களாக உடுமலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் ஒரே நாளில், 5 அடி வரை உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம், மொத்தமுள்ள 60 அடியில், 38.15 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 43.23 அடியாக உயர்ந்தது. அணைப்பகுதியில், 24 மி.மீ., மற்றும் நீர்பிடிப்பு பகுதியான நல்லாற்றில், 157 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.
இதே போல், கேரளா மாநிலம் மூணாறு சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அமராவதி நீர்பிடிப்பு ஆறுகளிலும், வெள்ளப்பெருக்கு துவங்கியுள்ளது. பாம்பாறு உள்ளிட்ட அணைகளின் நீர்பிடிப்பு ஆறுகளின் வழியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து திடீரென உயர்ந்துள்ளதால், பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சாகுபடி செழிக்கும் வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை சுற்றுப்பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரியாக மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை இச்சாகுபடிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும், இந்த சீசனில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் போர்வெல்களுக்கு நீர் வரத்து கிடைக்கும்; காய்கறி சாகுபடி பணிகளையும் மேற்கொள்ள முடியும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
குளங்களுக்கு கொடுங்க பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, தற்போது திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆயக்கட்டு பகுதிகளில், பெய்து வரும் தொடர் மழையால், பாசன தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்த முடியாது.
திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாகி உயர்ந்து வரும் நிலையில், இத்தருணத்தை பயன்படுத்தி, கிராம குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., கால்வாய்கள் வாயிலாக கிராம குளங்களில், தண்ணீர் நிரப்பினால், அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பாசன நீரும் வீணாகாது. இது குறித்து பொதுப்பணித்துறையினர் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.