ADDED : செப் 04, 2025 11:50 PM

க ற்றுத்தருவதுடன் நின்றுவிடாமல், மாணவர்களின் குடும்பப்பின்னணி அறிந்து, அதற்கேற்ப அவர்களை உயர்த்துவதற்கான வழிமுறைகளை ஆராய்பவர்களும் ஆசிரியர்கள்தான். மனதிற்குள் முடிவெடுத்துவிட்டால், அதைச் செயல்படுத்துவதற்குச் சிறிதும் தயங்காமல், அதற்குத் தடைவரினும் அஞ்சாமல் இருப்போரும் ஆசிரியர்களே... இதுதொடர்பான தங்கள் அனுபவங்களை ஆசிரியர் அல்லாதோர் இங்கே பகிர்ந்துகொள்கின்றனர்.
60 ஆண்டு கடந்தும் மறக்காத நளவெண்பா
கோவிந்தராஜ், ஓய்வு பெற்ற வேளாண்துறை அலுவலர்: தற்போது எனக்கு, 75 வயதாகிறது. கதை, கட்டுரை, கவிதைகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். கடந்த, 1963 - 1968ல், ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன்; எனக்கு தமிழ் கற்பித்த தமிழாசிரியர் அரங்கசாமி, தமிழ் கற்பித்த விதம் மிக சிறப்பு; கம்பராமாயணம், நளவெண்பா போன்ற பாடல்களை அவர்கள் கற்பித்த விதம், இன்றும் என் மனதில் நிலைத்து நிற்கிறது. (நளவெண்பா பாடலை பாடி காண்பித்தார்). எனக்கு ஆங்கில கல்வி போதித்த ஆசிரியர் கிருஷ்ணசாமியை சந்தித்து பழங்கள் கொடுத்து, ஆசி பெற்று வந்தேன். துவக்ககல்வி கற்பித்த ஐசய்யா, ராஜமாணிக்கம் ஆகியோரை இன்றும் மறக்க முடியாது. ஆசிரியர்கள் தான் ஒரு மனிதனைசெதுக்கும் சிற்பிகள்.
வாழ்க்கையை பிரகாசமாக்கியது கல்வி
கவிதா கஸ்துாரி, ராமியம்பாளையம், சேவூர்: எனக்கு வயது, 39; நான் ஏழாவது மட்டுமே படித்திருந்தேன். இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். 8 ஆண்டுக்கு முன் என் கணவர் மாரடைப்பில் இறந்தார். அதன் பின் நிர்கதியாகி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்; சொந்த ஊர் சென்றுவிடலாமா என்றும் கூட நினைத்தேன். சாலையப்பாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை சத்யபிரியா என் நிலையறிந்து என்னை ஆற்றுப்படுத்தினர். தையல் தொழில் கற்று, தொழில் செய்ய உதவினார். 'பள்ளிக் கல்வியை படிக்க வேண்டும்' என்றார். 'பள்ளி புத்தகத்தை புரட்டி, பல ஆண்டு இடைவெளியாகிவிட்ட நிலையில் சாத்தியமே இல்லை; படிப்பு மண்டையில் ஏறாது' என்றேன்.
'விடாமல் முயற்சித்தால் கண்டிப்பாக முடியும்; படிப்புக்கு வயது ஒரு தடையல்ல' என, ஊக்குவித்து, அதற்கு வழிகாட்டினார். 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 11ம் வகுப்பை தனி தேர்வராக தேர்வெழுதி தேர்ச்சியும் பெற்றேன். தற்போது, 12ம் வகுப்பு பயின்று வருகிறேன். இடையில், எனக்குசத்துணவு உதவியாளர் வேலை கிடைத்தது; நான், 10ம் வகுப்பு தேறியதால், பதவி உயர்வு கிடைக்கும் என்கின்றனர். திக்குதிசை தெரியாமல் இருந்த என்எதிர்காலத்தை, கல்விதான் பிரகாசமாக்கியது.
மாசற்ற சுற்றுச்சூழல் ஆசிரியர்களின் அவா
பத்மநாபன், துப்புரவாளன் அறக்கட்டளை: சுற்றுப்புற துாய்மையை அடிப்படையாக கொண்டு, குப்பையில்லா வீதி, தெரு, ஊரை உருவாக்கம் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வீடுகளில் இருந்தே குப்பையை தரம் பிரித்து, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக பிரித்தெடுத்து, அவற்றை முறையாக கையாளும் விழிப்புணர்வை, இதுவரை, 50 பள்ளிகளில் நடத்தி வருகிறோம். மாணவ, மாணவியரிடம் மக்காத பாலிதீன் குப்பைகளை சேகரித்து வரச் சொல்லி, அவற்றை சேகரித்து முறையாக அகற்றுகிறோம். மாணவர்களிடம் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இத்திட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, பாட புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும் என்ற ஆவல், ஆசிரியர்கள் வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்; மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கும் இந்த யோசனை, விரைவில் நடைமுறைக்கு வரும் என நம்புகிறோம்.