/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசியில் கனமழை; சாலைகள் வெள்ளக்காடு
/
அவிநாசியில் கனமழை; சாலைகள் வெள்ளக்காடு
ADDED : அக் 11, 2025 11:17 PM

அவிநாசி: நேற்று மாலை, 3:00 மணியளவில் அவிநாசி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் துவங்கியது.
அவிநாசி, சேவூர், தண்ணீர் பந்தல், அ.குரும்பபாளையம், திருமுருகன்பூண்டி, பெருமாநல்லுார், வேலாயுதம்பாளையம், ஆட்டையம்பாளையம், தெக்கலுார், பழங்கரை மற்றும் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
அவிநாசியில் கச்சேரி வீதி, தாலுகா அலுவலகம் முன்பு, வடக்கு ரத வீதி, சீனிவாசபுரம் பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து காட்டாற்று வெள்ளம் போல ஓடியது. பல இடங்களில், டூவீலர்களின் சக்கரம் மூழ்கும் அளவு மழை நீர் தேங்கி நின்றது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சாலையில், மழை வெள்ளம் பாய்ந்ததால், வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார் கூறியதாவது:
அவிநாசி நகராட்சி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோட்டின் இருபுறமும் பைப் லைன், கேபிள் ஒயர்கள் மற்றும் நான்கு ரத வீதியில் புதைவட மின்கம்பிகள் புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் என பல்வேறு காரணங்களுக்காக ரோடுகள் தோண்டப்பட்டது.
தற்போது வரை நெடுஞ்சாலை துறையினரும், அவிநாசி நகராட்சி நிர்வாகமும் ரோடுகளை சீரமைக்கவில்லை.
நேற்று பெய்த கனமழை காரணமாக, வாகன ஓட்டிகள் படும் சிரமத்தை விட நடந்து செல்பவர்கள் நிலை அபாயகரமானதாக இருந்தது. எங்கு குழிகள் இருக்கிறது என தெரியாமல் கடும் அவஸ்தைப்பட்டனர். 10 மீ., இருந்த ரோட்டின் அகலம் தற்போது ஏழு மீட்டராக குறுகி விட்டது.
அதற்குள் தான் வாகனங்கள், பாதசாரிகள் என அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு நெடுஞ்சாலைத்துறை யினரும், நகராட்சி நிர்வாகமும் மக்களை தள்ளி உள்ளனர்.
ரோடுகளை செப்பனிடாவிட்டால், மக்களை திரட்டி ரோட்டில் நாற்று நடும் போராட்டம்நடத்துவோம்.