/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொந்த ஊர் பாசம்; எஸ்.ஐ.ஆர். படிவம் வழங்க தயக்கம்
/
சொந்த ஊர் பாசம்; எஸ்.ஐ.ஆர். படிவம் வழங்க தயக்கம்
சொந்த ஊர் பாசம்; எஸ்.ஐ.ஆர். படிவம் வழங்க தயக்கம்
சொந்த ஊர் பாசம்; எஸ்.ஐ.ஆர். படிவம் வழங்க தயக்கம்
ADDED : டிச 08, 2025 05:28 AM
திருப்பூர்: சொந்த தொகுதி பட்டியலில் தொடர விரும்பும் வெளிமாவட்ட தொழிலாளர் பலர், திருப்பூரில் வழங்கப்படும் எஸ்.ஐ.ஆர்., கணக்கீட்டு படிவங்களை திருப்பி அளிப்பதில்லை.
நாட்டின் மிகப்பெரிய பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நகரான திருப்பூர், அனைத்துதரப்பினருக்கும் வேலை அளிக்கும் மையமாக உள்ளது. வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் ஏராளமானோர், சொந்த ஊர்களை விட்டு, திருப்பூரில் தங்கி, ஆடை உற்பத்தி, ஜாப் ஒர்க் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
இரட்டைப்பதிவுவாக்காளர்கள் மதுரை, தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து, திருப்பூரில் தங்கி பணிபுரியும் தென்மாவட்ட தொழிலாளர் பலர், சொந்த ஊரிலும், திருப்பூரிலும் என இரண்டு இடங்களிலும் வாக்காளராக தொடர்கின்றனர். தீவிர திருத்தம் நடைபெற்று வரும் நிலையில், இரட்டை பதிவுள்ள தொழிலாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக தங்கள் சொந்த ஊரிலுள்ள படிவங்களை பெற்றுக்கொள்கின்றனர். அதேநேரம், திருப்பூரில் வழங்கப்படும் படிவங்களையும் வாங்கி வைத்துக்கொள்கின்றனர்.
சொந்த ஊரில்தொடர விருப்பம் தீவிர திருத்தத்தில், ஏதேனும் ஒரு தொகுதிக்கு மட்டுமே படிவம் பூர்த்தி செய்து கொடுத்து, வாக்காளராக தொடரமுடியும்; மற்றொரு தொகுதியிலிருந்து பெயர் நீக்கப்படும்.
இந்நிலையில், திருப்பூரில் பணிபுரியும் தென்மாவட்ட தொழிலாளர் பெரும்பாலானோர், சொந்த ஊரிலேயே வாக்காளராக தொடர விரும்புகின்றனர்.
திருப்பூரில் பணிபுரிவது குறிப்பிட்ட காலம் வரைதான்; அதன்பின், எப்படியும் சொந்த ஊர் நோக்கி செல்லவேண்டும். ஏற்கனவே, ஆதார், ரேஷன் கார்டு ஆகியவற்றை திருப்பூர் முகவரிக்கு மாற்றம் செய்துவிட்ட நிலையில், சொந்த ஊருடனான தொடர்புக்கு, வாக்காளர் அட்டை மட்டுமே உள்ளது.
மேலும், சொந்த ஊரில், தேர்தலில் போட்டியிடுவோர் உறவினர் அல்லது நண்பர்களாக உள்ளனர்; அவர்களின் வெற்றிக்கு கைகொடுக்க வேண்டும். அதனாலேயே, சொந்த ஊர் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை விட்டுக்கொடுக்க பலருக்கும் மனமில்லை.
திரும்பிவராதபடிவங்கள் உறவினர்கள் வாயிலாக, சொந்த ஊரில் வழங்கப்படும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.,க் களிடம் திருப்பி அளிக்கின்றனர்; திருப்பூரில் வழங்கப்படும் படிவங்களை, பூர்த்தி செய்யாமலும், திருப்பி அளிக்காமலும் வைத்துக்கொள்கின்றனர்.
3 தொகுதிகளில் சிக்கல்: மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய மூன்று தொகுதிகளில் பின்னலாடை தொழிலாளர் அதிகம் வசிக்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும், காலையில் பணிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவதால், தொழிலாளரை கண்டறிய முடிவதில்லை என்பது ஒருபுறமிருக்க, சொந்த ஊரே போதும் என்கிற தொழிலாளரின் மனநிலை காரணமாக, மூன்று தொகுதிகளிலும் படிவம் பூர்த்தி செய்து பெறும் விகிதம் குறைவதாக, அரசியல்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

