/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை தேடிவந்த பட்டாம்பூச்சி படை
/
பசுமை தேடிவந்த பட்டாம்பூச்சி படை
ADDED : டிச 08, 2025 05:28 AM

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே தற்போது செயல்படும் கால்நடை மருத்துவமனை வளாகம் கடந்த, 1926ல், தொழிலதிபர் விட்டல் தாஸ் சேட் என்பவரால் தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில்தான் அமைந்துள்ளது. 1.96 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது.
பரபரப்பான நகரப்பகுதியில், மரம், செடி, கொடிகள் சூழ, பசுமை போர்வைக்குள் அடைக்கலமாகியிருக்கிறது, இந்த பசுமை போர்வை, கிழித்தெறியப்படாமல் பாதுகாக்க வேண்டியது, சுற்றுச்சூழல் மீது நேசம் கொண்டோரின் பொறுப்பு; இத்தகைய எண்ணத்துக்கு துாபமிடுகிறது, அங்குள்ள செடி, கொடிகளில் பலவகை வண்ணத்துப்பூச்சிகளின் படையெடுப்பு.
பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜெயபால் நம்மிடம் பகிர்ந்தவை:
செடி, கொடிகளின் வளர்ச்சிக்கு, மகரந்த சேர்க்கை மிக முக்கியம். இதில், பட்டாம்பூச்சிகளின் பங்களிப்பு மிக முக்கியம். பொதுவாக, மிக வறட்சியான, காற்று மாசு நிறைந்த பகுதிகளில் செடி, கொடிகள் இருந்தாலும் அங்கு பட்டாம் பூச்சிகள் வராது.
மாறாக, இதமான காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு குறைந்த பகுதிக்கு தான், பட்டாம்பூச்சிகள் அதிகளவில் வரும். அதேபோன்று, பூக்கள் இருக்கும் அனைத்து செடிகளிலும் தேன் குடிக்காது.
தனக்கு பிடித்தமான செடியை தேர்வு செய்து தேன் குடிக்கும். வண்ணத்துப்பூச்சிகள் வந்து செல்லும் இடம், சற்றே ஈரப்பதம் நிறைந்ததாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாக, காற்று, நீர், நிலம் மாசுபடாத இடமாக இருக்கிறது என்பதன் அர்த்தம்.
அத்தகைய இடங்களை அதன் சூழல் தன்மை மாறாமல் பாதுகாப்பது தான் சுற்றுச்சூழலுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.

