/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுக்கு மாடி குடியிருப்புக்கு வீட்டு வரி
/
அடுக்கு மாடி குடியிருப்புக்கு வீட்டு வரி
ADDED : ஆக 20, 2025 01:09 AM
திருப்பூர்; மாநகராட்சி பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட வரியை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நகர எல்லையில், நீர் வழித்தடம், வருவாய் துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான இடங்களில் பலரும் வீடு கட்டி வசித்து வந்தனர்.
பல ஆண்டுகள் ஏராளமான குடும்பங்கள் இவ்விடங்களில் வசித்து வந்தன. பல்வேறு துறைரீதியான நடவடிக்கைகள், கோர்ட் உத்தரவு போன்றவற்றின் பேரில் இது போல் ஆக்கிரமிப்பிலிருந்த வீடுகள் அகற்றப்பட்டன.
அவற்றில் வசித்தோருக்கு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
அவ்வகையில், வீரபாண்டி, வஞ்சி நகர் - 540 வீடு, பாரதி நகர் - 288, ஜெயா நகர் - 256, திருக்குமரன் நகர் - 1,248 வீடுகளில் பயனாளிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதில், பாரதி நகர், ஜெயா நகர் மற்றும் திருக்குமரன் நகர் ஆகிய இடங்களில், 1,792 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன.
அதன்படி, இந்த வீடுகள் பயனாளிகள் பெயரில் வழங்கப்பட்ட தேதியின் அடிப்படையில் மாநகராட்சி வீட்டு வரிவிதிப்பு செய்து நோட்டீஸ் வழங்கியது.
அவ்வகையில், இதில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் அடிப்படையில் 2020 -21ம் ஆண்டில் 5 வீடு, 21-22 ம் ஆண்டில், 207, மேலும் 2022-23 ம் ஆண்டில் 1237 வீடுகள், 2023-24ம் ஆண்டில், 1,293 வீடுகளுக்கும், 2024-25ம் ஆண்டில், 1,792 வீடுகளுக்கும் வீட்டு வரி விதிப்பு செய்து நோட்டீஸ் சார்பு செய்யப்பட்டது.
அவ்வகையில், மொத்தம், 44.43 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டியிருந்தது. இது பயனாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான பயனாளிகள் நடப்பாண்டில் தான் குடியேறினர்.
வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆண்டு முதல் சொத்து வரி கேட்கப்பட்டது அதிர்ச்சியடையச் செய்தது. இது குறித்து தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தி, குடியேறுவதற்கு முன்னர் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.
இதுதவிர, நகர்ப்புற மேம்பாட்டு வாரியமும், வீடு ஒதுக்கீடு நடவடிக்கைகள் 2024-25ம் ஆண்டில் தான் முழுமையடைந்தது; இந்த காலத்துக்கு வீட்டு வரிவிதிப்பு செய்யலாம் என்று பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் இந்த, 1,792 வீடுகளுக்கும் விதிக்கப்பட்ட சொத்து வரியை மாற்றம் செய்து, 2024-25ம் ஆண்டு முதல் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த வரி மாற்றம் மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீதான நடவடிக்கைக்குப் பின் இந்த வரிகள் மாற்றி அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.