/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைத்திருவிழா போட்டியில் சாதித்தது எப்படி?
/
கலைத்திருவிழா போட்டியில் சாதித்தது எப்படி?
ADDED : நவ 17, 2025 01:21 AM

திருப்பூர் மாவட்டத்தில், சமீபத்தில், மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்ற, 212 மாணவ, மாணவியர், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
முயற்சியும், பயிற்சியும் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு பிரிவில் 15 வேலம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பத்து புள்ளிகளுடன் முதலிடம் வகித்தது.
பரதநாட்டியம் தனி போட்டியில் ஸ்ரீஷா, கண்ணதாசன், நாட்டுப்புற நடனம் தனி பிரிவில் ரஸ்வினா, குழு பிரிவில், ரஞ்சனா, இளமதி, பார்கவி, ஸ்ரீ தா, சுவாதி, ரஸ்வினா, ரக்சக்ஷா, வினோதினி, சவேகா, சாய்கிருஷ்ணா. வெற்றி பெற்று, பத்து புள்ளிகள் பெற்றுள்ளனர்.
''ஆசிரியர்கள் ரேவதி (நாட்டுப்புற நடனம்), வனிதா, சந்தானலட்சுமி (பரதநாட்டியம்) சிறப்பாக பயிற்சி அளித்துள்ளனர். எங்கள் பள்ளியின் இந்த வெற்றிக்கு, மாணவ, மாணவியரின் இடைவிடாத பயிற்சியும், விடாமுயற்சியும் தான் காரணம்; ஆசிரியர் அர்ப்பணிப்போடு பணியாற்றினர்.
பெற்றோர்கள் நேரம் தவறாமையை கடைபிடித்து, இயன்ற ஒத்துழைப்பை எங்களுக்கு வழங்கினர்; தொடர் முயற்சியால், வெற்றி சாத்தியமானது'' என்கிறார், பள்ளி தலைமை ஆசிரியர் ராதாமணி.
ஒற்றுமையும், அர்ப்பணிப்பும் ஆறு முதல் எட்டு பிரிவு - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிறுபூலுவப்பட்டி பள்ளி, 19 புள்ளிகள் பெற்றது. பரத நாட்டியம், கிராமிய குழு நடனம், கிராமிய தனி நடனம் மூன்று பிரிவிலும் இப்பள்ளி அசத்தி, முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
பொறுப்பாசிரியர் முருகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி ஆகியோர் கூறுகையில், ''மாணவியர் ஆர்வம் தான் எங்களது வெற்றி.
குழு நடனத்தில் சைகை, அசைவு உற்று கவனிக்கப்படும்; அதற்கேற்ப நளினம் வேண்டும் என கற்றுக்கொடுத்ததை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். மாணவியர் ஒற்றுமை, அர்ப்பணிப்பு, செயல்பாடு தான் எங்கள் பள்ளிக்கு பெருமை தேடி தந்து, மாநில போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது'' என்றனர்.
ஆர்வமும், திறமையும் ஒன்பது, பத்தாம் வகுப்பு பிரிவில் - ஜெய்வாபாய் பள்ளி அதிகபட்சமாக, 11 வெற்றிகளை பெற்றுள்ளது. மேல்நிலைப்பள்ளி பிரிவிலும், இப்பள்ளி, 25 வெற்றிகளை பெற்றுள்ளது.
பூர்விகா (வீணை, ஹார்மோனியம்), அக் ஷிதா (வீணை), பிளஸ்ஸி (ஹார்மோனியம்), நாட்டுப்புற நடனம் குழு (ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவியர்), மித்ரா (பரதநாட்டியம் தனி), இலக்கிய நாடகம் குழு (பிளஸ் 1 மாணவியர்), வசுந்தரா (கேலிச்சித்திரம் வரைதல்), அபிநயா (செவ்வியல் இசை), வில்லுப்பாட்டுகுழு, பொம்மலாட்டம் குழு (மேல்நிலைப்பள்ளி மாணவியர்), ஹரிணி (பாவனை நடிப்பு), கவிபிரியா (நாட்டுப்புறப்பாடல்)
'போட்டி அறிவித்த நாள் முதல் ஆர்வமுள்ள மாணவியரை ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வு செய்தோம். பாடல் கருத்து தேர்வு, உடை உபகரணம் உட்பட அனைத்திலும் பொறுப்பாசியர்கள் சங்கரேஸ்வரி, ஜோதிலட்சுமி, அனுராதா, அங்கையற்கண்ணி சிறப்பாக பணியாற்றினர். மாணவியர் திறமை காட்டி பள்ளியை மாநில போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்,' என்கிறார், பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா.
இதேபோல், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பிரிவில், வாமலைக்கவுண்டம்பாளையம் துவக்கப்பள்ளி முதலிடம் பெற்றது.

