/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கங்கையின் வரலாறு கேட்டால் பித்ருதோஷம் விலகும்'
/
'கங்கையின் வரலாறு கேட்டால் பித்ருதோஷம் விலகும்'
ADDED : டிச 01, 2024 01:08 AM

திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜையை முன்னிட்டு, ராமாயண தொடர் சொற்பொழிவு, நடைபெற்று வருகிறது.
இதில், மஹாரண்யம் முரளீதர சுவாமிகளின் சீடர் முரளிஜி பேசியதாவது:
ராஜ ரிஷியான விஸ்வாமித்திரர், நடத்திய யாகத்துக்கு, அம்புகளாலேயே பாதுகாப்பு வளையம் அமைத்து பாதுகாத்தார், ராமர். யாகத்தை சீர் குலைக்க வந்த சுபாகு முதலான அரக்கர்களையெல்லாம் அழித்த ராமர், ராவணனின் தாய்மாமனான மாரீசனை மட்டும் அழிக்காமல், இலங்கையில் சென்று விழச் செய்தார்.
யாகம் நல்லபடியாக முடிந்ததால், ராமர், லட்சுமணர்களை, ஜனகர் நடத்திய யாகத்துக்கு அழைத்துச் சென்றார், விஸ்வாமித்திரர். செல்லும்வழியில், விஸ்வாமித்திரர், கங்கையின் கதையை கூறுகிறார். கங்கையின் கதையே கேட்டாலேபோதும், பித்ரு தோஷம் விலகும் என்கின்றனர் சான்றோர். எனவே, இந்த கதையை அனைவரும் காதுகொடுத்து, முழு கவனத்தோடு கேட்கவேண்டும்.
வாமன அவதாரத்தில், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நாராயணன், 2வது அடியை வானத்தில் வைத்தார். பகவானின் திருவடியானது விண்ணை தாண்டி, பிரம்மலோகம் வரை சென்றது. பிம்மனோ, தனது கையிலிருந்த நீரை, பகவானின் கட்டை விரலில் ஊற்றி அபிஷேகம் செய்தார்; அந்த நீருக்கு விஷ்ணுபதி என்றுபெயர்.
தேவலோகத்துக்கு வந்தபோது அந்த நீருக்கு, மந்தாகினி என்று பெயர். தேவலோகத்திலிருந்த மந்தாகினியை தனது தலையில் தாங்கிய சிவபெருமான், அதில் ஒரு துளியை பூமிக்கு அனுப்பினார்.
பூமியில் பெருகெடுத்து ஓடிய கங்கை, ஜக்னு முனிவரை அடித்துச்சென்றது. கோபமடைந்த முனிவர், கங்கையை வாரி குடித்தார். பகீரதனின் வேண்டுகோளை ஏற்ற முனிவர், தனது வலது காது வழியாக கங்கையை விடுவித்தார். ஜக்னு முனிவரின் காது வழியாக வந்ததால், கங்கைக்கு ஜாக்னவி என்கிற பெயர் வந்தது. ஆகாச கங்கையை பகீரதன் பூமிக்கு கொண்டுவந்ததால், பகீரதியானாள். ஹரித்துவாருக்கு வரும்போதுதான், கங்கை என்கிற பெயர் வந்தது. இவ்வாறு, அவர் பேசினார்.

