/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பால் உற்பத்தி ஊக்கத்தொகை அதிகரிப்பு
/
பால் உற்பத்தி ஊக்கத்தொகை அதிகரிப்பு
ADDED : நவ 09, 2024 12:40 AM

திருப்பூர் ; பால் உற்பத்திக்கான ஊக்கத் தொகையை அதிகரித்து வழங்க கோரி, பால் வளத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று திருப்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் ஆய்வு செய்தார். முன்னதாக பொங்கலுார் ஒன்றியம் ராமம்பாளையத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். அதன் உறுப்பினர்களிடம் பால் உற்பத்தி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து திருப்பூர் குமார் நகரில் உள்ள கதர் கிராம தொழில் வாரிய மண்டல துணை இயக்குநர் அலுவலகம், உற்பத்தி மையம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். அம்மையத்தில் நடைபெறும் உற்பத்தி மற்றும் விற்பனை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடந்தது.
முன்னதாக, கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியத்தில் அமைச்சரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர்கோபாலகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு:
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகை நிலுவையில் உள்ளதை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி. இனி வரும் காலங்களில் இத்தொகையை நிலுவையின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும்.பால் உற்பத்தி செலவானது லிட்டருக்கு 38 ரூபாய் ஆகிறது.
கொள்முதல் விலை 32 ரூபாயாக உள்ளது. பால் உற்பத்தியாளர் நலன் கருதி இந்த ஊக்கத் தொகையை, கர்நாடக மாநிலத்தில் வழங்குவது போல் 10 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் அமைச்சர் ஆய்வின் போது, ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், ஆவின் பொது மேலாளர் சுஜாதா, துணை பதிவாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.