/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பண்பாடு உணர்ந்தால் சிறக்கும் பாரதம்
/
பண்பாடு உணர்ந்தால் சிறக்கும் பாரதம்
ADDED : நவ 02, 2025 11:10 PM

திருப்பூர்:  திருமுருகன்பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலயம் டிரஸ்ட் சார்பாக வாரந்தோறும் மாணவர்களுக்கு பாரதப் பண்பாடு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. இதுபற்றி நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன் கூறியதாவது:
ஆறு மாதமாக இப்பயிற்சி வகுப்பு வழங்கி வருகிறோம். அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகின்றனர். பண்பாடு கற்க ஆர்வம் கொண்ட எந்த மாணவரும் கலந்து கொள்ளலாம். நாம் அன்றாடம் இயங்க மூச்சு விடுதல், கண் விழித்தல் போன்ற இயல்புகள் போல இயல்பாக இருப்பது கலாச்சாரம்.
இன்றைய காலத்தில் நம் பாரம்பரியம், பண்பாடு சீரழிந்து வருகிறது. அதை மீட்டெடுக்க, பண்பாடு பற்றிய பயிற்சி அவசியம். வளரும் குழந்தைகளிடம் பண்பாடு பயிற்றுவிப்பது நாட்டின் நலனுக்கு தேவையாகிறது. தனிமனித ஒழுக்கத்திற்கும், நாட்டின் நன்மைக்கும் பண்பாடு அவசியமாகிறது.
லஞ்சம், பாலியல் கொடுமை போன்ற உலகில் நடக்கும் பல கொடுமைகளுக்கு பக்குவமில்லாத மனம், பண்பாடு சீரழிவு காரணமாகிறது. உடலை பலப்படுத்த உணவு, உடற்பயிற்சி இருக்கிறது.
உடலை துாய்மைப்படுத்த சோப்பு, ஷாம்பு எனப் பல வழிகள் இருக்கிறது. மனத்தை துாய்மைப்படுத்த, பலப்படுத்த பண்பாடு மற்றும் பயிற்சியால் மட்டுமே சாத்தியம்.
உணவு பண்பாடு பண்பாட்டை முட்டாள்தனம், பூமர் என்று விமர்சிக்கும் மக்கள், கொரோனா காலத்தில் கொள்ளு ரசம், வேப்பிலை சட்னி என்று பாரம்பரியத்தை பின்பற்றினரே! வீட்டில் பாட்டி இருந்தால் ஒரு டாக்டர் இருக்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்று பண்பாடு, பாரம்பரிய உணவை விட்டு 'பாஸ்ட் புட்' என்ற பேரில் 'பாஸ்ட் டெட்'-க்கு சென்று கொண்டிருக்கிறோம். அப்போது 60 முதல் 90 வயது வரை வாழ்ந்திருக்கின்றனர். இப்போது அப்படி இல்லை. உணவு பழக்கம் மாறி விட்டது. மாறாக வெளிநாடுகளில் நம் பண்பாட்டை, பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
பெரியோரை மதித்தல் பெரியவர்களை மதிப்பதால் பணிவு வரும். அதை அடிமைத்தனம் என்று எண்ணக்கூடாது. ஒரு காலத்தில் வெளிநாட்டவர் நம் பண்பாட்டை பார்த்து வியந்தனர். சரியான வசதி இல்லாத போதும் அறிவாளியாக, ஒழுக்கத்துடன் இருந்தது கண்டு வியந்தனர். அது குருகுலத்தில் கல்வி கற்ற காலம்.
குருகுலத்தில் ஆசிரியர் கூறும் அனைத்து வேலையும் செய்து குருவின் சொல் தப்பாது கல்வி கற்றனர். இக்காலத்தில் படிப்பு தவிற வேறு எந்த வேலையும் செய்யாமல் இருக்கின்றனர். குருவின் பேச்சை மீறுகின்றனர்.
பெற்றோரே 'டியூன்' அக்காலத்தில் பள்ளிக்கு உணவு கொண்டு போகும் போது, மற்றவர்க்கு கொடுக்க வேண்டும் என்று மற்றொரு உணவுப்பொட்டலத்தையும் கொடுத்து அனுப்பி வைப்பர். இப்போது, பெற்றோர்களே யாருக்கும் ஏதும் கொடுக்கக்கூடாது என்று பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பதால் ஆரம்பத்திலேயே பிறருக்கு கொடுக்கும் பண்பு தடுக்கப்படுகிறது. ஆசிரியர் அடித்தால் கூட உடனே அவர் மீது குறை சொல்கின்றனர்.
அக்காலத்தில் பண்பாடு - கலாசாரம் இருந்ததால் தேசம் நன்றாக இருந்தது. பண்பாடு அழியத் தொடங்கியதால் இன்று நாடு சீரழிந்து வருகிறது. நாம் ஒழுங்காக இருப்பதில்லை, நம் சுற்றத்தார் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.
பண்படுத்துவது பண்பாடு ஒரு செடி வளர, மண்ணை பண்படுத்தி, தண்ணீர் ஊற்றி, குறித்த காலத்தில் விதைப்பர். செடி வளர்ப்பதற்கு பண்படுத்துவது போல் மாணவரை கற்க பண்படுத்தி பாடம் எடுக்க வேண்டும். கலாசாரம், பண்பாட்டை பின்பற்றினால் மட்டுமே தேசம் நல்வழிப்படும்.
அனைத்தும் மனமே:  நம்மை ஆட்கொள்வது நம் மனம்தான். 'மைண்ட் யுவர் மைண்ட்' என்று விவேகானந்தர் கூறுவார். மனம் ஒழுங்காக இருக்க, எந்த பிரச்னையும் வராது. காலையிலும் மாலையிலும் மனம் அமைதியாக இருக்கும். நல்ல அதிர்வலைகள் நிறைந்ததிருக்கும். அப்போது, எண்ணங்களை நம் இலக்கில் வைக்க வேண்டும். எண்ணம் போல்தான் வாழ்க்கை. எண்ணமாகிய விதை செயலாகிய மரமாகும். எதை விதைக்கிறோமோ அதுவே வளரும். நல்ல எண்ணங்களை விதைத்தால் நல்வினை வரும்.
இன்று சமூகத்தில் நடக்கும் எல்லாப் பிரச்னைக்கும் காரணம் பண்பாடும் கலாசாரமும் மறந்து நாம் வேறு வழியில் செல்வது தான். பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த பண்பாட்டை சட்டென்று விலக்கிவிடுவது தவறு. பிற உயிர்களிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்துவது, நாம் பின்பற்றும் பண்பாடுதான். அதன் அழிவால் உலகில் பல பிரச்னைகள் நடக்கின்றன. கலாசாரம், பண்பாடு மீண்டு வருதலே இன்று நடக்கும் அனைத்து பிரச்னைக்கும் தீர்வாகும்.
- செந்தில்நாதன்:  நிர்வாக அறங்காவலர்:

