/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் தொடரும் குழந்தை திருமணம் குழு நடவடிக்கையை தீவிரப்படுத்துங்க
/
கிராமங்களில் தொடரும் குழந்தை திருமணம் குழு நடவடிக்கையை தீவிரப்படுத்துங்க
கிராமங்களில் தொடரும் குழந்தை திருமணம் குழு நடவடிக்கையை தீவிரப்படுத்துங்க
கிராமங்களில் தொடரும் குழந்தை திருமணம் குழு நடவடிக்கையை தீவிரப்படுத்துங்க
ADDED : ஜன 08, 2025 10:48 PM
உடுமலை, ; உடுமலை சுற்றுப்பகுதியில் அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்த, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு செயல்பாட்டை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்தும், கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை.
இன்றைய சூழலில், பெற்றோரின் கட்டாயத்தில் திருமணம் நடப்பது குறைந்து, வளர் இளம் பருவத்தில் ஏற்படும் மன குழப்பத்தினால், உரிய ஆலோசனை இல்லாமல், மிகச்சிறிய வயதில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை சுற்றுப்பகுதியில், குறைந்த பட்சம் ஒரு மாதத்தில் இரண்டு வீதம் சமூக நலத்துறையில் குழந்தை திருமணம் குறித்து புகார் பதிவு செய்யப்படுகிறது.
குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான புகார்கள் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும், சம்பந்தபட்ட நபர்கள் விரும்பி திருமணத்தை ஏற்றுக்கொள்வதால், புகார்களும் பதிவு செய்யப்படுவதில்லை.
அவர்கள் குழந்தை பேறுக்கென மருத்துவமனைகளை அணுகும் போது மட்டுமே, இப்பிரச்னை கண்டறியப்படுகிறது.
விழிப்புணர்வு இல்லை
கிராமங்களில் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்னை குறித்து முழுமையான விழிப்புணர்வு இல்லாததும், இவ்வாறு செய்வதன் வாயிலாக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடுவது குறித்தும், அலட்சியமாக இருப்பதுதான் இப்பிரச்னை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
கிராமங்களில் இத்தகைய பிரச்னைகளை தவிர்க்கவும், பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாப்பதற்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதில் அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிர் குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டு, அவர்களுக்கான கூட்டங்களும் நடத்த வேண்டும்.
ஆனால், இதுபோல் தற்போது எந்த நடவடிக்கைகளும் கிராமங்களில் மேற்கொள்ளப்படுவதில்லை.
குழந்தை திருமணம் தவறு என்பதை இன்னும் அழுத்தமாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பெண்களுக்கு விழிப்புணர்வு அவசிமாகியுள்ளது.
இவ்வாறு திருமணம் செய்வோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் பட்சத்தில், அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுவதுடன், பச்சிளம் குழந்தைகளின் எதிர்காலமும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது.
கிராமங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
பெற்றோருக்கும் ஆலோசனை
டாக்டர்கள் கூறியதாவது: பெண்களின் உடல்நிலை, ஒரு குழந்தை பேறு பெறுவதற்கு தயாராவதற்கும் குறிப்பிட்ட காலம் உள்ளது. ஆனால் குழந்தை திருமணம் நடப்பதால், அவர்களின் உடல்நிலை குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாமல், குழந்தை பேறு வரை செல்கின்றனர். இதனால் ரத்தசோகை உட்பட பல நோய்களுக்கு மிக எளிதில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பிறக்கும் குழந்தைகளுக்கும் குறைபாடு ஏற்படுகிறது.
உளவியல் ரீதியாகவும் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கான மனநிலை வருவதற்கு முன்பே ஒரு குடும்ப கட்டமைப்புகள் தள்ளப்படுகின்றனர். உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் தீவிரமான விழிப்புணர்வு கிராமங்களில் தேவைப்படுகிறது.
இதற்கென சிறப்பு குழு அமைத்து தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதால் மட்டுமே இப்பிரச்னையை தவிர்க்க முடியம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கும் ஆலோசனை அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.