/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமூகப்பொறுப்புடன் மாணவரை உருவாக்குகிறோம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் நல்லாசிரியர்கள் பேட்டி
/
சமூகப்பொறுப்புடன் மாணவரை உருவாக்குகிறோம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் நல்லாசிரியர்கள் பேட்டி
சமூகப்பொறுப்புடன் மாணவரை உருவாக்குகிறோம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் நல்லாசிரியர்கள் பேட்டி
சமூகப்பொறுப்புடன் மாணவரை உருவாக்குகிறோம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் நல்லாசிரியர்கள் பேட்டி
UPDATED : செப் 05, 2025 07:36 AM
ADDED : செப் 04, 2025 11:46 PM

- நமது நிருபர் -
வலுவான, வளமையான தேசம் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. அவர்களது அர்ப்பணிப்பு நிறைந்த பணியை போற்றும் விதமாக தான், ஆண்டுதோறும், செப்., 5ம் தேதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, இந்த முறை, 11 ஆசிரியர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது. ''சமூகப்பொறுப்புள்ள, சுய ஒழுக்கத்துடன் கூடிய மாணவர்களை உருவாக்குவதே எங்கள் லட்சியம்'' என்று இவர்கள் கூறுகின்றனர். விருது பெறும் நல்லாசிரியர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
எதிர்பார்ப்பற்ற பணிக்கு
கிடைத்த அங்கீகாரம்
முருகேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர், ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்:
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுவது, பாக்கியம். அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் ஒவ்வொருக்கும் தனித்திறமை உண்டு. அதை அடையாளம் கண்டு, உரிய பயிற்சியளித்து, போட்டிகளில் பங்கெடுத்து, வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுத்து வருகிறேன். எந்தவித எதிர்பார்ப்புமின்றி பணியாற்றும் போது, அதற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் என்பதற்கு, இந்த விருது ஒரு சான்று.
--
கிராம மாணவர்கள் சளைத்தவர் அல்லர்
ரவிச்சந்திரன், தலைமையாசிரியர்,ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி, கணியூர்:
கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, அவர்கள் உயர்நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே என் நோக்கம். மெட்ரிக் பள்ளிகளுக்கு நிகரான உட்கட்டமைப்புடன் எங்கள் பள்ளி செயல்படுகிறது. கிராமப்புற மாணவர்கள் எந்த வகையிலும் இளைத்தவர்கள், சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், பலரும் டாக்டர், பொறியாளர் என உயர் பதவியை பிடித்துள்ளனர். அதற்கான அங்கீாரம் தான், இந்த விருது.
--
கற்றல் சூழல் மேம்பட முயன்றிருக்கிறேன்
காஞ்சனமாலை, தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கருகம்பாளையம், திருப்பூர்:
கல்வி கற்க தேவையான அடிப்படை சூழ்நிலைகளை மேம்படுத்தி கொடுக்க பெரும் முயற்சி எடுத்திருக்கிறேன். இதனால் மாணவர்களின் கற்றல் சூழ்நிலை மேம்பட்டிருக்கிறது. பிற ஆசிரியர்களின் துணையுடன், அனைத்து வித போட்டிகளுக்கும் மாணவர்களை அழைத்து சென்று பங்கெடுக்க செய்கிறேன். பாடத்துடன், பிற இணை செயல்பாடுகளில் மாணவ, மாணவியரின் திறமைகளை ஊக்குவித்து வருகிறோம்.
---
மாணவர் வீட்டுக்கே சென்று கற்பித்தேன்
ராஜேஷ், ஆசிரியர், தாளக்கரை நடுநிலைப்பள்ளி, குண்டடம்:
கொரோனா தொடர் விடுமுறையில் மாணவர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் பயிற்றுவித்தேன். ஆங்கில உச்சரிப்பு, சிந்தித்து விடையளிக்கும் எளிய கற்றல் முறையில் பயிற்றுவிக்கிறேன். மெல்ல கற்கும் குழந்தைகளின் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்துகிறேன். செயல்பாடு, விளையாட்டு, நாடகம், பாடல் வாயிலாக கற்பிக்கிறேன்; இதுபோன்ற பல்வேறு கற்பித்தல் முறையால் மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்ட்டிருக்கிறது.
---
ஆசிரியப்பணியின் நோக்கம் உணர்ந்து செயல்படுகிறேன்
பிரியர்தர்ஷினி, கணினி பயிற்றுனர், கொங்கு மெட்ரிக் பள்ளி, ஊத்துக்குளி:
சுய ஒழுக்கம், சமூக பொறுப்பு கொண்ட மாணவர்களை உருவாக்குவதே என் ஆசிரியப்பணியின் நோக்கம். அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அங்கீகாரம் தான், அரசின் இந்த விருது என கருதுகிறேன். பள்ளி முதல்வர், நிர்வாகம், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புக்கு கிடைத்த விருதாகவும் கருதுகிறேன்.
--
மாணவருக்கு சிலம்பாட்டம் இலவசமாக பயிற்றுவிக்கிறேன்
கோவிந்தராஜூ, ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, பூலுவப்பட்டி: மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்தி, தேர்ச்சி பெறச் செய்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாமாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் கல்விப்பணியற்றி வருகிறேன். மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பாட்டம் பயிற்றுவித்து வருகிறேன். வரும் நாட்களில் மாணவர் நலன் காக்கும் கல்வி போதிப்பு முறையை மேலும், மேம்படுத்திக் கொள்ள இது, ஊக்குவிப்பாக அமைந்திருக்கிறது.
---
புதிய தொழில்நுட்பத்துடன் மாணவருக்குக் கற்பிக்கிறேன்
சிவகுமார், ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கணக்கம்பாளையம் :
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு புதிய கற்பித்தல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி கற்பித்து வருகிறேன். இதனால், வாசிக்கவே தெரியாத மாணவர்களை வாசிக்க வைத்ததற்கான அங்கீகாரம் தான் விருது பெற முக்கிய காரணம். ஏராளமான மாணவர்களை போட்டி தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறேன்; தேர்வு வாயிலாக, 8 முதல், 12ம் வகுப்பு வரை, அரசு வழங்கும் கல்வி உதவி தொகை பெற, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி தயார்படுத்தி வருகிறேன்.
---
ஆங்கிலப்புலமை வளர்ப்பு குறிக்கோளுடன் செயல்பாடு
ஆனந்தி, தலைமையாசிரியை, சாயப்பட்டறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, உடுமலை:
ஒரு ஆசிரியராக மாணவர்களிடம் அன்பு, பாசத்துடன் பாடம் புகட்டுவது, அதையும் தாண்டி, மாணவர்களின் சூழலை புரிந்துக் கொண்டு, அவர்களை கற்றலில் மேம்பாடு அடைய செய்வதே என் நோக்கம். குறிப்பாக, மாணவர்களின் தனித்திறமையை புரிந்துக் கொண்டு, அந்த திறமைகளை வெளிக் கொணர்வது, மாணவர்களிடம் ஆங்கிலப்புலமையை வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறேன்.
---
பணியை மேம்படுத்த உதவப்போகும் விருது
தங்கவேல், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஆண்டியகவுண்டனுார்:
கடந்த, 30 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். கல்வி சேவை மட்டுமின்றி, பொது சேவையிலும் ஈடுபட்டு வருகிறேன். கொரோனா சமயத்தில் பெற்றோர், மாணவர் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டேன். இந்த விருது, என் பணியை மேலும் மேம்படுத்த உதவும்.
--
ஆசிரியர் - பெற்றோர் இடைவெளி தவிர்த்தேன்
ஜோயல் விமல காந்தன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, விஜயாபுரம்:
முதலில், ஆசிரியர்களிடம் ஒற்றுமை மனநிலையை மேம்படுத்தி, கற்பித்தல் முறையில் கவனம் செலுத்தினேன்; ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினரின் ஒத்துழைப்புடன், இடைநிற்றல் தவிர்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை அதிகரித்தது. ஆசிரியர் - பெற்றோர் இடையே இடைவெளி தவிர்க்கப்பட்டது; பொதுமக்கள் பங்களிப்புடன் பள்ளியை மேம்படுத்தி வருகிறேன். கடந்த ஓராண்டில், ஏற்கனவே, இரு விருதுகளை பெற்றுள்ளோம்.
--
மாணவர்கள் சிறக்க பல வழிமுறைகள்
அலமேலு மங்கை, இடைநிலை ஆசிரியை,ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஊத்துக்குளி:
மாணவர் சேர்க்கை, வாசிப்பு திறன் மேம்படுத்துவது, புரவலர் சேர்க்கை, பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, பல்வேறு வகை விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கெடுக்க செய்வது போன்ற பல்வேறு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறமையை மேம்படுத்தி, சமூக பொறுப்பு மிக்க மாணவர்களை உருவாக்குவதே என் லட்சியம்.