/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிக்கு அடையாள எண் முகாமில் பங்கேற்க அழைப்பு
/
விவசாயிக்கு அடையாள எண் முகாமில் பங்கேற்க அழைப்பு
ADDED : பிப் 12, 2025 12:29 AM
பல்லடம்; விவசாயிகளுக்கான அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு, பல்லடம் வட்டார விவசாயிகளுக்கு, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் விவசாய நலத்திட்டங்கள் அனைத்தும் முறையாக விவசாயிகளுக்கு விரைவில் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில், மத்திய, மாநில அரசு சார்பில், 'வேளாண் அடுக்ககம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ், விவசாயிகளும் தங்களது விவரங்களை பதிவு செய்து விவசாய அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும். பல்லடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராம விவசாயிகளின் விவரங்களும் பெறப்பட்டு, செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும்.
பொதுமக்களுக்காக உள்ள ஆதார் எண்ணை போன்று, விவசாயிகளுக்கு அடையாள எண்கள் வழங்கப்பட்டு, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து மத்திய மாநில அரசுகளின் மானிய திட்டங்களின் பயன்களை எளிமையாகவும், விரைவாகவும் பெற முடியும் என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மானியத் திட்டங்களைப் பெற விவசாயிகள் ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் போதும், ஆவணங்கள் சமர்ப்பிக்காமல் அனைத்து துறை பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
விவசாயிகள், ஆதார் அட்டை, நில பட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், போட்டோ ஆகியவற்றுடன் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களை அணுகவும். மேலும் விவரங்களுக்கு, பல்லடம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.