/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி விரிவாக்கத்தில் ஒருதலைபட்சம் இது நியாயமா? போராட தயாராகும் கிராமங்களின் மக்கள்
/
நகராட்சி விரிவாக்கத்தில் ஒருதலைபட்சம் இது நியாயமா? போராட தயாராகும் கிராமங்களின் மக்கள்
நகராட்சி விரிவாக்கத்தில் ஒருதலைபட்சம் இது நியாயமா? போராட தயாராகும் கிராமங்களின் மக்கள்
நகராட்சி விரிவாக்கத்தில் ஒருதலைபட்சம் இது நியாயமா? போராட தயாராகும் கிராமங்களின் மக்கள்
ADDED : ஜன 02, 2025 10:17 PM

உடுமலை : உடுமலை நகராட்சி விரிவாக்கத்தில், நகரை ஒட்டிய ஊராட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், கிராம பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
உடுமலை நகராட்சி, தற்போது, 7.41 சதுர கி.மீ., பரப்பளவில், 33 வார்டுகளுடன், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், 61,150 மக்கள் தொகை உள்ளது. நகராட்சி ஆண்டு வருவாய் சராசரியாக, ரூ. 32.11 கோடியாக உள்ளது.
நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தவும், நகருக்கு அருகிலுள்ள வளர்ச்சியடைந்த ஊராட்சிகளை இணைக்க, 2023 நவ., 23ல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அரசாணை வெளியிட்டுள்ளதோடு, உள்ளாட்சி அமைப்புகள் இதற்கான தீர்மானம் நிறைவேற்றிய அனுப்ப அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 3 ஆண்டு வரவு - செலவு அறிக்கை, மக்கள் தொகை உள்ளிட்ட விபரங்களையும் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், கடந்தாண்டு, ஜன.,யில் நடந்த நகராட்சி கூட்டத்தில், நகருக்கு அருகிலுள்ள ஊராட்சிகளான, கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறிஞ்சேரி, சின்ன வீரம்பட்டி, கண்ணமநாயக்கனுார், 1,2. ராகல்பாவி, கணபதிபாளையம், பூலாங்கிணர், குரல்குட்டை மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள புக்குளம், கோட்ட மங்கலம், பொன்னேரி, தொட்டம்பட்டி ஆகிய 14 ஊராட்சிகளை இணைக்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
ஊராட்சிகள் தீர்மானம் அடிப்படையில், பெரிய அளவில் இணைப்பு மேற்கொள்ளாவிட்டாலும், நகரை ஒட்டியே உள்ள கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், பெரிய கோட்டை, போடிபட்டி ஆகிய ஊராட்சிகளை இணைக்க பரிந்துரை செய்து, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தது.
ஆனால், நேற்று முன்தினம் வெளியான அரசாணையில், பெரிய கோட்டை ஊராட்சியை மட்டும் இணைக்க பரிந்துரை செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உடுமலையை ஒட்டியே, கண்ணமநாயக்கனுார் ஊராட்சி அமைந்துள்ளதோடு, உடுமலை நகராட்சியின் கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மேற்கு எல்லையாக இந்த ஊராட்சி பகுதி உள்ளது.
இந்த ஊராட்சியும், தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் நகரை ஒட்டியே அமைந்துள்ளது. போடிபட்டி ஊராட்சி நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சிகளை இணைக்காமல், வடக்கு மற்றும் வட மேற்கு எல்லையாக உள்ள பெரிய கோட்டை மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில், 16 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளன. அதோடு, இன்றளவும் பெரிய கோட்டை கிராமமாக உள்ளது.
இதனால், நகராட்சியுடன் இணையும், குடிநீர், பாதாள சாக்கடை, ரோடு என நகருக்கு இணையான வசதிகள் இருக்கும் என எதிர்பார்த்திருந்த மற்ற ஊராட்சி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பெரிய கோட்டை ஊராட்சி மட்டும் இணைந்தால், நகரின் விரிவாக்க பகுதிகள் இணையாமல், ஒரு பகுதி மட்டும் இணைக்கப்படுகிறது.
நகருக்கு அருகிலுள்ள ஊராட்சிகள், நகரின் அருகில் புதிதாக உருவான குடியிருப்புகள், தொழிற்சாலைகள் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, முழுவதுமாக, அல்லது பகுதியாக மற்ற பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், உடுமலை நகராட்சி இணைப்பு மட்டும், ஒரு ஊராட்சியுடன் முடிவடைந்துள்ளது.
உடுமலை நகர விரிவாக்கம் குறித்து, 10 ஆண்டுக்கு முன்பே, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், பெரியகோட்டை, போடிபட்டி, சின்னவீரம்பட்டி ஊராட்சிகளை இணைக்க தீர்மானம் நிறைவேற்றி, பல முறை கருத்துரு அனுப்பியும் நடவடிக்கை இல்லாத நிலையில், தற்போது விரிவாக்கத்தில் நகரை ஒட்டியுள்ள ஊராட்சி குடியிருப்புகள் இணையும் என எதிர்பார்த்திருந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முறையாக ஆய்வு செய்யணும்
பொதுமக்கள் கூறுகையில், 'உடுமலை நகராட்சியுடன் இணைந்தால், அடிப்படை வசதிகள் மேம்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், நகரை ஒட்டியே உள்ள கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், போடிபட்டி ஊராட்சிகளும் இணைக்கவில்லை. நகராட்சி எரிவாயு மயானம், கோட்டாட்சியர் அலுவலகம். வட்டார போக்குவரத்து அலுவலகம், ஐ.டி.ஐ., அரசு கல்லுாரி என உடுமலையின் அடையாளங்கள், அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியே இணைக்காமல், புறக்கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, முறையாக ஆய்வு செய்து, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, நகரை ஒட்டிய வளர்ந்த பகுதிகளை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். இது சம்பந்தமாக, தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.