/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடையடைப்பு போராட்டத்தால் தீர்வு கிடைத்தால் தித்திக்கும்! அரசு மீது வணிகர்கள் நம்பிக்கை
/
கடையடைப்பு போராட்டத்தால் தீர்வு கிடைத்தால் தித்திக்கும்! அரசு மீது வணிகர்கள் நம்பிக்கை
கடையடைப்பு போராட்டத்தால் தீர்வு கிடைத்தால் தித்திக்கும்! அரசு மீது வணிகர்கள் நம்பிக்கை
கடையடைப்பு போராட்டத்தால் தீர்வு கிடைத்தால் தித்திக்கும்! அரசு மீது வணிகர்கள் நம்பிக்கை
ADDED : டிச 19, 2024 05:52 AM

திருப்பூர்; மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திருப்பூர் அனைத்து வணிகர் சங்க பேரவை சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது; திருப்பூர், பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், முத்துார் உள்ளிட்ட பகுதிகளில் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அபரிமித சொத்துவரி உயர்வு, ஆண்டுக்கு 6 சதவீத வரி உயர்வு மற்றும் வணிக நோக்கில் இயங்கும் கட்டடங்களுக்கு வாடகையில், 18 சதவீத ஜி.எஸ்.டி., ஆகியவற்றால் கடும் பாதிப்பு ஏற்படுமென, வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கருப்புக்கொடி
திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த, 8ம் தேதி முதல், அனைத்து கடைகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றிவைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று, முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
திருப்பூர், பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், முத்துார் பகுதிகளில், நேற்று கடைகள் முழு அளவில் அடைக்கப்பட்டிருந்தன. பால், ஆவின் பாலகம், மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க் நீங்கலாக, மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சங்கங்கள் ஆதரவு
திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. காதர்பேட்டை செகண்ட்ஸ் வியாபாரிகள், தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், சலுான்கள் என, பல்வேறு சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
தொழிலாளர் நலன் கருதி, சில ஓட்டல்களில் மட்டும், உணவு தயாரித்து, பார்சல் விற்பனை மட்டும் செய்யப்பட்டது. தொழிலாளர் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக, 'டிரம் டீ' விற்பனையாளர்கள், நேற்று நகரப்பகுதியில் சுற்றியும், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களிலும் விற்பனை செய்தனர். இதேபோல், உணவு பொட்டலங்களும், 'டூ வீலரில்' சென்று விற்கப்பட்டன.
தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு உட்பட, அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
தீர்வுதான் தேவை
கடையடைப்பு போராட்டத்தால், சொத்து வரி உயர்வு மற்றும் வணிக நோக்கில் இயங்கும் கட்டடங்களுக்கு வாடகையில் 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிப்பு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்; மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வணிகர்கள் காத்திருக்கின்றனர்.
---
சொத்து வரி உயர்வு, வணிகக் கட்டடங்களுக்கு வாடகையில் 18 சதவீத ஜி.எஸ்.டி., ஆகியவற்றுக்கு எதிராக, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திருப்பூர் அனைத்து வணிகர் சங்கப் பேரவை சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருப்பூர், அவிநாசி ரோட்டில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.