ADDED : ஏப் 18, 2025 06:51 AM

திருப்பூர்; வரத்து அதிகரிப்பால், பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் ஆவதால், அழுகி, குப்பையில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரித்தது முதல் திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கான பூ வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வழக்கமாக, 1.20 முதல், 1.50 டன் மல்லிகை பூ விற்பனைக்காக வரும். தற்போது, 1.65 டன் வரை மல்லிகை வருகிறது. பூ வரத்து உயர்வால், கிலோ, 600 - 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகை, 300 - 400 ரூபாயாக குறைந்துள்ளது. 250 கிராம், 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; இருப்பினும், எதிர்பார்த்த அளவு பூ விற்பனை இல்லை.
பூ வியாபாரிகள் கூறுகையில், ' தமிழ்ப்புத்தாண்டுக்கு பின் விசேஷ தினங்கள் இல்லை. தேய்பிறை நாட்களாக உள்ளதால், முகூர்த்த நாட்களிலும் பூ விற்பனை அதிகரிக்கவில்லை. விற்பனை உயரும் போதும் பூ வரத்து குறைந்து விலையை கூடுதலாக்குகிறது. தற்போது, விற்பனை இல்லை. நேர்மாறாக பூ அதிகமாக வருகிறது. விற்றது போக மீதி தேக்கமாகி, அழுகல் ஏற்படுவதால், குப்பையில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.