/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாகசம் விரும்புவோருக்காக 'ஜெட்' வேக படகு
/
சாகசம் விரும்புவோருக்காக 'ஜெட்' வேக படகு
ADDED : ஏப் 14, 2025 11:25 PM

திருப்பூர்; சாகசம் விரும்புவோருக்காக, ஆண்டிபாளையம் படகு இல்லத்தில், அதிவேகமாக செல்லும் படகு சேர்க்கப்பட்டுள்ளது.
திருப்பூர் - மங்கலம் ரோட்டிலுள்ள ஆண்டிபாளையம் குளத்தில், மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் படகு சவாரி செல்வதற்காக, 8 பேர் பயணிக்கும் 2 மோட்டார் படகு; 4 பேர் பயணிக்கும் 2 பெடல் படகு; 2 பேர் பயணிக்கும் வகையிலான 6 பெடல் படகு; 4 பேர் பயணிக்கும் 3 துடுப்பு படகு என, 13 படகுகள் மற்றும் ஒரு மீட்பு படகுடன் படகு இல்லம் செயல்பட்டுவருகிறது.
வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாதநிலையில், படகு இல்லத்துக்கு பொதுமக்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும், 25 ஆயிரம் பேர் குளத்தில் படகு சவாரி செய்துள்ளனர். பரீட்சை முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதால், வரும் நாட்களில் மக்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சாகசங்களை விரும்புவோருக்காக, 'ஜெட்ஸ்கி' எனப்படும் அதிவேகமாக செல்லும் படகு கோவையிலிருந்து நேற்று ஆண்டிபாளையம் படகு இல்லத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த படகில், ஓட்டுனர் ஒருவர் மற்றும் பயணி ஒருவர் செல்லமுடியும். இப்படகை இயக்குவதற்காக, பயிற்சிபெற்ற ஓட்டுனர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டிபாளையம் குளம் முழுவதையும் இந்த ஜெட் வேக படகில் 5 நிமிடத்துக்குள் சுற்றிவந்துவிடலாம். இதற்கான கட்டணமாக, 350 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.