/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி துாய்மைப்பணிகளில் வேலை உறுதி பணியாளர்கள்
/
பள்ளி துாய்மைப்பணிகளில் வேலை உறுதி பணியாளர்கள்
ADDED : செப் 09, 2025 10:13 PM
உடுமலை; பள்ளி முழு துாய்மைப்பணிகளில், வேலை உறுதி திட்டப்பணியாளர்களை ஈடுபடுத்த, உள்ளாட்சி நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அரசுப்பள்ளிகளில் முழுமையான சுகாதாரத்தை உறுதிப்படுத்த, தொடர்ந்து துாய்மைப்பணிகள் மேற்கொள்வதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஆனால் பள்ளிகளில் துாய்மை பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் 302 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. ஆனால் பல பள்ளிகளில் இப்பணிகளுக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது.
ஒரு பள்ளிக்கு, ஒரு துாய்மை பணியாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கும் ஊதியம் வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதால், முழுமையான துாய்மைப்பணிகளை மேற்கொள்வதற்கு வருவதில்லை.
பள்ளி கழிப்பறைகளை மட்டுமே, சுத்தம் செய்து செல்கின்றனர். பள்ளி வளாகம், வகுப்பறை, நீர்த்தொட்டி, பள்ளித்தோட்டங்களை துாய்மைப்படுத்துவதற்கு, ஆட்கள் தேட வேண்டிய நிலை தான் பள்ளிகளில் தற்போது உள்ளது.
இத்தகைய பணிகளுக்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்களை பயன்படுத்த பள்ளி நிர்வாகத்தினர் உள்ளாட்சி நிர்வாகத்தினர் அனுமதி வழங்கவும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்