/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையும் சாத்தியமாகும்
/
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையும் சாத்தியமாகும்
ADDED : டிச 07, 2024 07:02 AM

ஓமன் தலைநகர், மஸ்கட்டில் நடந்த 21 வயதுக்கு உட்பட்டோருக்கான, 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 5 - 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, ஜூனியர் ஆசியக் கோப்பையை கைப்பற்றி மகுடம் சூடியுள்ளது. இதனால், 2025ம் ஆண்டு நடக்கும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஹாட்ரிக் சாதனை பெருமையான தருணம்
சேகர் மனோகரன், பொருளாளர், ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு: கடந்த, 2004 முதல் இதுவரை ஐந்து முறை ஜூனியர் கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணி, மூன்று முறை தொடர் வெற்றி பெற்று, ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
பெருமையான தருணமிது. அணியை சிறப்பாக வழி நடத்தி வரும் பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ், கேட்பன் ஆமிர் அலி, துணை கேப்டன் ரோகித் பாராட்டுக்குரியவர்கள். இறுதி போட்டியில் அசத்தலாக ஆடி பெனால்டி கார்னர் வாய்ப்பை அராய்ஜீத் சிங் சிறப்பாக பூர்த்தி செய்தார். இறுதிப்போட்டி, முதல் இடைவேளைக்கு பின் சமனில் (3-3) இருந்தாலும், கடைசி வரை தடுப்பு ஆட்டம் ஆடி, நம் வீரர்கள் அசத்தினர். இதனால், 5 - 3 என்ற வெற்றி சாத்தியமானது. தற்போது உள்ள அணிகளில் மிக வலுவானதாக உள்ளது; நிச்சயம் இந்த அணி ஜூனியர் உலக கோப்பையை வெல்லும் இந்திய அணியாக திகழும்.
திறமையான வீரர்கள் தேர்வு பிரமாதம்
ராஜராம், சீனியர் பயிற்சியாளர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி; ஒரு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல அணி வீரர் தேர்வு முக்கியம். கோல்கீப்பர் துவங்கி, அணி வீரர்கள் வரை அனைவரும் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதில் ஹாக்கி இந்தியா அமைப்பு கவனமாக இருந்தது.
தேர்வு செய்த வீரர்கள் அசத்தலாக ஆடி வெற்றி தேடித்தந்துள்ளனர். இந்த வெற்றி, வரும், 2025 ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு பெரும் உந்துதலாக அமையும். இறுதி போட்டி பாகிஸ்தானுடன் என்பதால், எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அராய்ஜீத்சிங் ஆட்டம் பாராட்டும் வகையில் இருந்தது.
உயரக்கொண்டு செல்லும் முனைப்புக்கு உறுதுணை
செந்தில்குமரன், திருப்பூர் மாவட்ட ஹாக்கி அணி பயிற்சியாளர், பெதப்பம்பட்டி பள்ளி உடற்கல்வி இயக்குனர்; ஜூனியர் அணி பாராட்டுக் குரிய அணியாக மாறியுள்ளது. ஹாக்கி இந்தியா அமைப்பு இந்திய ஹாக்கி அணியை உயரக்கொண்டு செல்ல எடுக்கும் முயற்சிகளுக்கு தற்போதுள்ள அணி, வீரர்கள் பொருத்த மானவர்களாக, பெரும் பக்க பலமாக இருக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளுடன் விளையாடும் போது தடுப்பு ஆட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போதுள்ள அணி அப்படியே ஒலிம்பிக்கில் விளையாடினால், நிச்சயம் நாம் கோப்பையை கைப்பற்றி வர நிறைய வாய்ப்புள்ளது. வெற்றியை உரித்தாக்க, வீரர்களின் ஒத்துழைப்பும், ஒற்றுமையும் இன்னும் வேண்டும்.