/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சும்மாவே 'முன்மாதிரி'! ஊராட்சிகளுக்கு இப்படியும் 'நெருக்கடி'
/
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சும்மாவே 'முன்மாதிரி'! ஊராட்சிகளுக்கு இப்படியும் 'நெருக்கடி'
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சும்மாவே 'முன்மாதிரி'! ஊராட்சிகளுக்கு இப்படியும் 'நெருக்கடி'
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சும்மாவே 'முன்மாதிரி'! ஊராட்சிகளுக்கு இப்படியும் 'நெருக்கடி'
ADDED : அக் 09, 2025 12:10 AM

திருப்பூர்: 'திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சிகள், 'மாடல் வில்லேஜ்' என தீர்மானம் நிறைவேற்றி பதிவு செய்ய வேண்டும்' என, ஊரக வளர்ச்சி முகமை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. பெயரளவில் கூட திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படாத நிலையில், ஏட்டளவில் 'மாடல் வில்லேஜ்' என பதிவு செய்யப்பட வேண்டிய நிலைக்கு ஊராட்சி நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், வரும், 11ம் தேதி கிராம சபை நடக்கிறது. 'கிராம ஊராட்சிகளில், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை வசதி கொண்ட கிராம ஊராட்சிகள், தங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி, 'மாடல் வில்லேஜ்' (மாதிரி கிராமம்) என்ற நிலையை எட்ட வேண்டும். அந்தந்த ஊராட்சியின் தகுதியை வரையறை செய்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 265 ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலான ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை என்பது பெயரளவில் கூட இல்லை. இருப்பினும், அதிகாரிகளின் நெருக்கடியால் 'மாடல் வில்லேஜ்' என தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என, ஊராட்சி நிர்வாகத்தினர் ஆதங்கப்படுகின்றனர்.
'திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வரும் நிலையில், இதுபோன்ற தவறான தகவல்களால், கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி தடைபடும்; இது, ஒரு வகையில் மத்திய அரசை ஏமாற்றும் செயல் தான்' என, ஊராட்சி செயலர்கள் கூறுகின்றனர்.
போதிய பணியாளர் இல்லை
பஞ்சலிங்கம், மாவட்ட செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கம்:
ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை பெயரளவில் தான் உள்ளது. சரியான கட்டமைப்புடன் ஆத்மார்த்தமாக செயல்படுவதில்லை. முதல்வர், அமைச்சர், உயரதிகாரிகள் வரும் போது மட்டும் தான், துாய்மைப் பணியில் கவனம் செலுத்தப்படுகிறது.
துாய்மைப்பணியாளர்களுக்கு மிகக்குறைந்தளவு சம்பளம் தான் வழங்கப்படுகிறது; ஐகோர்ட் உத்தரவிட்டும், குறைந்தபட்ச சம்பளம் கூட வழங்கப்படுவதில்லை. போதியளவு பணியாளர்களும் இல்லை. அவர்களுக்கு சட்ட, சமூக, நிதி பாதுகாப்பு என்பது அறவே இல்லை. இத்தகைய சூழலில், 'மாடல் வில்லேஜ்' என்ற வரையறைக்குள் ஊராட்சிகள் எப்படி வரும் என்பது தான் கேள்வி.
எங்கும் குப்பைமயம்
அசோக்குமார், முன்னாள் தலைவர், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு, திருப்பூர்:
திடக்கழிவு மேலாண்மை திட்டம், எங்கும் கிடையாது; எங்கும் குப்பை மயம் தான். உதாரணமாக, பொங்கலுார் பகுதியில் குவியும் குப்பை தான், பி.ஏ.பி., வாய்க்காலை குப்பைத் தொட்டியாக மாற்றி வைத்திருக்கிறது.
துாய்மைப் பணியாளர்களுக்கு வெறும், 4,500 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது; இந்த சொற்ப அளவு சம்பளத்துக்கு யாரும் வர மாட்டார்கள். விலைவாசிக்கேற்ப சம்பளம் வழங்கினால், திடக்கழிவு மேலாண்மை பணிக்கு வர பலரும் தயாராக உள்ளனர். இறைச்சிக்கழிவு, மருத்துவக்கழிவு, உணவுக்கழிவு என அனைத்தும் திறந்தவெளியில் தான் கொட்டப்படுகின்றன. எனவே, வாழ்வாதாரத்துக்கு தேவையான சம்பளத்துடன், ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கேற்ப துாய்மைப் பணியாளர்களை நியமித்து, உரிய கட்டமைப்பை ஏற்படுத்தினால், திட்டம் வெற்றிபெறும்.