/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்ணன் - ராதையராக மாறிய குட்டீஸ்
/
கண்ணன் - ராதையராக மாறிய குட்டீஸ்
ADDED : ஆக 16, 2025 10:23 PM

திருப்பூர்; ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, திருப்பூர் குருவாயூரப்பன் கோவிலில், கிருஷ்ணர் போல் வேடமிட்ட குழந்தைகளுடன் வந்து பக்தர்கள் வழிபட்டனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று, காலை, குருவாயூரப்பன் சுவாமிக்கு மகா அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில், பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண் குழந்தைகள், கிருஷ்ணர் போலவும், பெண் குழந்தைகள் ராதை போலவும் வேடமிட்டு வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில், புல்லாங்குழல்களுடன், ஸ்ரீகிருஷ்ணரும், ராதையரும் நடமாடுவது போல் கோலாகலமாக இருந்தது.
பக்தர்கள், குருவாயூரப்ப சுவாமிக்கு, துளசிமாலை மற்றும் செந்தாமரை மலர் சமர்ப்பித்து வழிபட்டனர். சுற்றுப்பகுதியில் உள்ள, கிருஷ்ணர் கோவில், வீரராகவப்பெருமாள் கோவில்களில், செப்., 15ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அவிநாசி அவிநாசி பா.ஜ., மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் பேரவை இணைந்து நாரசா வீதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணன், ராதை சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். பிறகு ராதை, கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் 'ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா' என பாடி, ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். குழந்தைகளுக்கு பரிசுகளும், பிரசாதமும் வழங்கப்பட்டது.
பா.ஜ., தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் சண்முகம், ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் சந்துரு உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு பரிசுகளை அவிநாசி ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனத்தினர் வழங்கினர்.