/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்
/
கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்
ADDED : ஏப் 28, 2025 06:14 AM

திருப்பூர் : காங்கயம் அடுத்த ஓலப்பாளையம், கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விக்ரம சோழீஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடக்கிறது.
இந்தாண்டு பொங்கல் விழா மே 8ம் தேதியும், தேரோட்டம் 12ம் தேதியும் நடக்கிறது. கோவில் திருவிழாவையொட்டி, ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை நேற்று துவங்கியுள்ளது. மே 7ம் தேதி வரை என, பத்து நாட்கள் சந்தை நடக்கிறது.
தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதோடு, வாங்கியும் செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மாடுகள் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். பழமையான மாட்டு சந்தையை பார்க்க கிராம மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.
சந்தையை ஒட்டி, கோவில் மணிகள், குஞ்சம், சாட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு மாடு வாங்க வரும் விவசாயிகள் மாடுகள் வாங்க முடியாவிட்டாலும், சாட்டையை வாங்கி செல்வதும்.
மாடு வாங்கும் விவசாயிகள் நேர்த்தி கடனாக மாரியம்மனுக்கு மொட்டை அடித்து, கோவில் முன்பு பூஜை செய்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.
மாட்டுச்சந்தை சுவாரசியம்
கண்ணபுரம் மாட்டுச்சந்தையில் மாடு வியாபாரம் சுவாரசியமாக இருக்கும்.
தரகர்கள் வியாபாரிகளை அழைத்து வந்து, மாடுகளை காண்பிப்பர். மாடுகள் பிடித்து போனால், தோளில் இருக்கும் துண்டு கைக்கு வந்து விடும். தரகரும், வியாபாரியும் துண்டை போட்டு கொண்டு பேரத்தை துவங்குவர்.
வியாபாரி, ஐந்து விரல்களை கூட்டி பிடித்தால், 5 ஆயிரம் ரூபாய்; மோதிர விரலையும், சுண்டு விரலையும் பிடித்தால், 7 ஆயிரம் ரூபாய் என குறிக்கும்.
சில்லறையை குறிக்க விரல்களில் உள்ள ஒவ்வொரு ரேகையையும் பிடித்து விலையை நிர்ணயம் செய்வது உண்டு.
விலை பேசும் போது, விலையை உடைத்து பேச, பாதி விரலை பிடித்து கொள்வர்.
அப்போது, தட்டை, வாச்சி, கொழுவு, பணயம் என்ற சொற்களையும் பேசி மாட்டின் விலை நிர்ணயிக்கப்படும். பரிமாறப்படும் சொற்களும் புரியாத தாகவே இருக்கும்.

