/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பொய் வழக்கு தொடர்வதா; கோர்ட்டில் முறையிடுவோம்'
/
'பொய் வழக்கு தொடர்வதா; கோர்ட்டில் முறையிடுவோம்'
ADDED : பிப் 21, 2025 12:18 AM

அவிநாசி; அவிநாசி தாலுகா, சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பந்தம்பாளையம் பகுதியில் திறக்கப்பட்ட மனமகிழ் மன்றத்தில் மதுக்கூடம் மற்றும் சீட்டாட்டம் நடத்தப்பட்டு வருவதாக கூறி, முறியாண்டம் பாளையம், சேவூர், வேட்டுவபாளையம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
கடந்தாண்டு ஜன., 2ல் மனமகிழ் மன்றத்திற்கு எதிராக 500க்கும் மேற்பட்ட மூன்று ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மனமகிழ் மன்றம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஒரு ஆண்டுக்கு பின், கிராமிய மக்கள் இயக்க தலைவர் சம்பத் குமார், பா.ஜ., வடக்கு ஒன்றிய செயலாளர் மாலதி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ரவிக்குமார், கணேஷ், விவசாயி மணிமாறன், பள்ளி தாளாளர் வெங்கடாசலம், அத்திக்கடவு- அவிநாசி திட்டக் குழு நிர்வாகி வேலுச்சாமி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் மீது, பொது இடத்தில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கூடி ரோட்டை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, நேற்று அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான இவர்கள் கூறுகையில், ''மக்களுக்காக போராடியவர்கள் மீது பொய் வழக்கு போட்ட போலீசார் மீது உயர்நீதிமன்றத்தில் எதிர் வழக்கு தொடர்ந்து நீதியை காப்பாற்ற போராடுவோம்.
இந்த வழக்கை தமிழக அரசு தாமாக முன்வந்து வாபஸ் பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்'' என்றனர்.

