/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விமர்சனங்களை கடப்போம்; உயரத்தை எட்டிப்பிடிப்போம்
/
விமர்சனங்களை கடப்போம்; உயரத்தை எட்டிப்பிடிப்போம்
ADDED : அக் 10, 2025 11:10 PM

திருப்பூர்; பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டி பாலின வேறுபாடுகளைக் குறைத்து எல்லா இடங்களிலும் பெண்களுக்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அதற்காக உலகம் முழுவதும் 2011 முதல், அக். 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ''சமூகத்தின் விமர்சனங்களைக் கடந்துசென்றால், எட்ட முடியாத உயரத்தை அடையலாம்'' என்பது நம்முடன் கருத்துகளைப் பகிர்ந்த பெண்மணியரின் எண்ணமாக இருந்தது.
பெண்ணுக்கு பெண் தான்...
அபிநயா, உளவியல் ஆலோசகர்:
பெண்களுக்கான இட ஒதுக்கீடு, சலுகைகள் ஏராளம் இருந்தாலும் இன்றளவும் பாலின வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. மதிப்பு கொடுத்தலில் சமுதாயம் பின்தங்கியுள்ளது. அட... ஆண்களை விடுங்கள், பெண்களே பெண்களை மதிப்பதில்லை. பெண் குழந்தைகளுக்கு துன்புறுத்துவதில் பெண்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. குடும்பத்தில் மாமியார் சண்டை, பிறக்கும் பெண் சிசுவை புறக்கணித்தல் போன்ற நிலை மாற வேண்டும்.
பெண்களுக்கு சரியான பாதுகாப்பு கிடைப்பதில்லை. ஆண் குழந்தைகளை முறையாக வளர்க்காமல் அதற்கும் பெண்ணே காரணமாக இருக்கிறாள். பெண் குழந்தைகளுக்கு இடஒதுக்கீட்டை தாண்டி, பாதுகாப்பு, கல்வி, பொருளாதார சுதந்திரத்துக்காக சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முதலில் பெண்தான் பெண்ணுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
நடைமுறை அறிவு வேண்டும்
சுகந்தி, பனியன் ஏற்றுமதியாளர் :
பெண்களுக்கான சலுகை, ஆதரவான சட்டங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை யாரும் அறியாமல் இருக்கின்றனர். படிப்பறிவுள்ளவர் கூட, சிறிய விஷயங்களுக்கு மனம் நொந்து போகின்றனர். துயரத்தில் இருந்து எப்படி வெளிவர வே ண்டும் என்று அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்னைக்கான தீர்வு பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் இருக்கிறது, ஆனால் அதை எப்படி சமாளித்து கடப்பது என்று தெரியவில்லை. இதற்கு நடைமுறை அறிவை வளர்க்கும் படியான கல்வி அமைய வேண்டும்.
தைரியமாக இருங்கள்
ஸ்ருதிகா, தொழில்முனைவர் :
ஆரம்பத்தில் என் தந்தையின் வழிகாட்டலில் வந்தேன், இருப்பினும் சமூக ஆணாதிக்கத்தை எதிர்கொள்ளும் நிலை வந்தது. பெண்தானே என்று பலர் துாற்றினர். படிப்பறிவில்லாதவர் என்று விமர்சிப்பவரைக் கடந்து சென்றேன். உழைப்பு கைகொடுத்தது. இன்று அவர்களை விட உயரத்தில் இருக்கிறேன். எதிர்கால பெண் குழந்தைகளுக்கு நான் சொல்வது என்னவெனில், ஆணாதிக்கத்தை கண்டு அஞ்ச வேண்டாம். எந்நேரத்திலும் தைரியமாக இருங்கள், தைரியமாகப் பேசுங்கள். சில இடங்களில் அனுசரித்தும் சில இடங்களில் பிடிவாதத்துடனும் இருக்க வேண்டும், இல்லையென்றால் நம்மை முடக்கி விடுவர்.
நம்மால் சாதிக்க முடியும்
வினுஷ்யா, என்.சி.சி. மாணவி, சிக்கண்ணா கல்லுாரி :
ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களும் ராணுவம் பற்றி அறிய வேண்டும் என்பதற்காக என்.சி.சி. வாயிலாக ராணுவ இணைப்பு முகாம் நடத்தப்படும். என்.சி.சி.யில் வைத்த தேர்வில் வெற்றி பெற்று ராணுவ இணைப்பு முகாமில் பங்கேற்றேன். ராணுவத்தில் எனக்கு மிகுந்த விருப்பம் உள்ளது. அதனால், பங்கேற்றேன். கயிறு ஏறுதல், எதிரிகளை தாக்குதல், துப்பாக்கி பயன்படுத்துதல், சைகை பயன்பாடு, உணவுமுறை பற்றி கற்றுக் கொண்டேன்.
ராணுவத்தில் அதிகாரியாகுவதற்கு என்.சி.சி. மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகம். குறிப்பாக என்.சி.சி.யில் 'சி' சான்றிதழ் உள்ளவர்களுக்கு எழுத்து தேர்வின்றி நேரடியாக நேர்முக தேர்வுக்குச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே அனைத்து பெண்களும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மால் எதையும் சாதிக்க முடியும்.
பெற்றோர் துணை நிற்கணும்
அர்ச்சனா, நீச்சல் வீராங்கனை:
நான் ஆறாம் வகுப்பு முதல் நீச்சல் பயிற்சி எடுத்து வருகிறேன். மாவட்ட, மாநில, தேசிய அளவில் நீச்சல் போட்டிக்குச் சென்று, வென்றுள்ளேன். பெண்களைப் பொறுத்த வரையில் ஒருகட்டத்துக்கு மேல் விளையாட்டை நிறுத்துகின்றனர். பெற்றோரும் நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், எனக்குப் பிடித்த ஒரே காரணத்தால் என் பெற்றோர் என்னை போட்டிகளுக்கு அனுமதித்தனர். இதுபோல அனைத்து பெற்றோர்களும் பெண் குழந்தைகளின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு துணைநின்றால் எல்லோராலும் சாதிக்க முடியும்.
-இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.