/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறந்தும் பட்டியலில் 'வாழும்' வாக்காளர்கள்
/
இறந்தும் பட்டியலில் 'வாழும்' வாக்காளர்கள்
ADDED : நவ 20, 2024 11:08 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், வீடு வீடாக நடத்தப்பட்ட வாக்காளர் சரிபார்ப்பில், 16 ஆயிரம் பேர் இறந்த வாக்காளராக கண்டறியப்பட்டனர். திருத்தத்தில் இதுவரை, 4 ஆயிரம் பேர் மட்டுமே பெயர் நீக்கத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.
தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை எட்டுவதற்கு, இரட்டைப்பதிவு, இறந்த வாக்காளர் நீக்கப்பட்டு, செம்மையான வாக்காளர் பட்டியல் தாயாரிப்பது அவசியமாகிறது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இளம் வாக்காளரை கண்டறிந்து பட்டியலில் சேர்க்கவும், இறந்தவர்களை நீக்குவதற்காகவும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) கடந்த ஆக., மாதம் முதல் வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணி மேற்கொண்டனர். கடந்த அக்டோபர், 18ம் தேதியுடன் முன்திருத்த பணிகள் முடிவடைந்தன.
பி.எல்.ஓ.,க்களின் கள ஆய்வில், மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 16 ஆயிரம் பேர் இறந்த வாக்காளராக கண்டறியப்பட்டனர். அதேபோல், மாவட்டத்தில் இரட்டை பதிவு வாக்காளராக சந்தேகிக்கும் 1.96 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு தபால் அனுப்பப்பட்டுள்ளது; வாக்காளர் அளிக்கும் பதில் அடிப்படையில், இரட்டை பதிவு வாக்காளரை நீக்கும் நடவடிக்கைகள் தனியே நடைபெற்று வருகின்றன.
கடந்த அக்., 29ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள், நேரடியாகவும், ஆன்லைனிலும், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்களுக்காகாக விண்ணப்பித்துவருகின்றனர். அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், கடந்த 16, 17 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
சுருக்கமுறை திருத்தம் துவங்கிய கடந்த அக்., 29ம் தேதி முதல் இம்மாதம் கடந்த 19ம் தேதி வரை, மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், மொத்தம் 29 ஆயிரத்து 375 வாக்காளர்கள், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.
பி.எல்.ஓ.,க்களின் கள ஆய்வில், மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளில் இறந்த வாக்காளர், 16 ஆயிரம் பேர் கண்டறியப்படிருந்தனர். ஆனால், சுருக்கமுறை திருத்தத்தில் இதுவரை, இறந்த வாக்காளரை நீக்க, 4,234 விண்ணப்பம் மட்டுமே பெறப்பட்டுள்ளது.
அதாவது, கள ஆய்வு விவர பட்டியல்படி, நான்கில் ஒரு பங்கு இறந்த வாக்காளரை நீக்குவதற்காக மட்டுமே, குடும்பத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இறந்தவர்களாக கண்டறியப்பட்டவர்களிலேயே இன்னும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டியலில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வரும், 28ம் தேதியுடன் சுருக்கமுறை திருத்தம் முடிவடைகிறது. இந்த திருத்த காலத்துக்குள்ளேயே, இறந்த வாக்காளர் அனைவரையும் நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இறந்த வாக்காளரை கண்டறிந்து நீக்குவதில், அரசியல் கட்சியினர், தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு பக்கபலமாக செயல்படவேண்டும். 18 வயது பூர்த்தியானவரை பட்டியலில் சேர்ப்பது போலவே, இறந்த வாக்காளரை பட்டியலிலிருந்து நீக்குவதும் நமது கடமை என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணர்ந்து செயல்படவேண்டும். வரும் 23, 24 தேதியில், ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.