/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு மேலாண்மை திணறும் உள்ளாட்சிகள்
/
திடக்கழிவு மேலாண்மை திணறும் உள்ளாட்சிகள்
ADDED : ஜூன் 19, 2025 04:22 AM

திருப்பூர், : மக்காத பொருட்கள் குப்பையுடன் கலந்து சேகரிக்கப்படுகிறது. இவற்றை தரம் பிரிப்பதற்குரிய இடம் இல்லை. இத்தகைய பணிகளை மேற்கொள்ள போதிய துாய்மைப்பணியாளர்களும் இல்லை என்பதுதான் மாவட்டத்தில் உள்ள யதார்த்த நிலை.
தொழில்துறையினர் மற்றும் அரசுத்துறையினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால், திருப்பூரில் 'பசுமை' தழைத்தோங்கியுள்ளது. ஆனால், மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில், குப்பைகள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இருப்பதில்லை. மேலும், உள்ளாட்சி நிர்வாகங்களும் இதில் அலட்சியமாக உள்ளன.
மாவட்டத்தில், பெயரளவில் நடைமுறையில் இருக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு, தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. ''வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைகளில், பெருமளவு மறுசுழற்சி செய்வதற்குரியது; அதை மக்களே தரம் பிரித்து, வருவாய் ஈட்டிக்கொள்ள முடியும்'' என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
துாய்மைப்பணியாளர்
எண்ணிக்கை போதாது
உள்ளாட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்பது, முழு அளவில் இல்லை; சில இடங்களில் பெயரளவில் கூட இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வீடு, வீடாக தினசரி குப்பை சேகரிக்கப்பட்டாலும், அவற்றை சேகரித்து வைத்து, தரம் பிரித்து அகற்ற போதிய இடமில்லை. அவ்வாறு இடமிருப்பினும், அத்தகைய பணிகளை மேற்கொள்ள துாய்மைப் பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை
மறுசுழற்சிக்கு
பயன்படுத்தலாம்
திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசகர் வேலுார் சீனிவாசன் கூறியதாவது:
பாலிதீன் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழில், ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், வீடுகளில் சேகரமாகும் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தொடர்புடைய பொருட்களை, மறுசுழற்சி விற்பனைக்கு வழங்கி, வருவாய் ஈட்டிக் கொள்ள குடியிருப்புவாசிகள் முன்வர வேண்டும். பாலிதீன் பொருட்கள் மட்டுமின்றி, காய்கறி கழிவு, இறைச்சிக்கழிவு உள்ளிட்டவற்றை கூட, மறுசுழற்சி வாயிலாக மாற்று பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த முடியும். அந்த வகையில், தினசரி பயன்படுத்தும் பாலிதீன் மற்றும் பாலிதீன் அல்லாத பொருட்கள், பாட்டில், கவர் உட்பட, 171 பொருட்களை மறுசுழற்சி பயன்பாட்டுக்கென விற்பனை செய்து, அதில் வருவாய் ஈட்ட முடியும். 15 பொருட்களை மட்டும் தான் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாது. இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும், புரிதல் மக்களிடம் வந்துவிட்டால், துாய்மைப்பணி எளிதாகும்.
---
பாலத்தின் கீழ் நல்லாற்றில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.
அவிநாசி - கோவை பைபாஸ் சாலை.