/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதுமையில் தனிமை... பெருங்கொடுமை!
/
முதுமையில் தனிமை... பெருங்கொடுமை!
ADDED : செப் 28, 2025 04:51 AM

கணவனுக்கு வயது, 105, மனைவிக்கு வயது, 97. கடந்த, 30 ஆண்டுகளாக, திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகேயுள்ள பத்ரகாளியம்மன் கோவில் வாசல் தான், அவர்களின் முகவரி.
தினசரி கோவிலை சுத்தம் செய்து, கிடைக்கும் உணவை உண்டு, காலம் நகர்த்தி வந்தனர். வயது மூப்பு காரணமாக, கோவில் வளாகத்தில் தஞ்சமடைந்திருப்பது பாதுகாப்பானதல்ல என்ற காரணத்தால், அடைக்கலம் தேடி அல்லாடிக் கொண்டிருந்தனர்.
திருப்பூர், வடக்கு போலீசாரின் கவனத்துக்கு அவர்களது விவரங்களை கொண்டு சென்ற, மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையினர், போலீசாரின் அனுமதியுடன், அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் இயங்கி வரும், நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் அவர்களை கொண்டு வந்த சேர்த்தனர். தலைவிரி கோலமாய், அழுக்குப்படிந்திருந்த அவர்களை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து தங்கள் இல்லத்தில் தங்க வைத்திருக்கின்றனர், அறக்கட்டளை நிர்வாகிகள்.
அவர்களது பின்னணியை அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ் விவரித்தார்...
விருதகிரி என்ற அந்த முதியவர், 105 வயதிலும் தெளிவாக பேசுகிறார். உடல் ஆரோக்கியம் பேணுகிறார். இளைஞர்கள், உடலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். 1952ல் இளங்கலை பட்டம் பெற்றதாக கூறும் அவர், தாங்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் கடந்த, 70 ஆண்டுக்கு முன் திருப்பூர் வந்தாகவும் கூறுகிறார்.
தனது ஒரே மகளின் ஆதரவில் திருப்பூரில் வசித்து வந்ததாகவும், தற்போது தங்களை பராமரிக்கும் மனநிலையில் யாரும் இல்லை என்பதை உணர்ந்து, வனவாசம் செல்ல முடிவு செய்த நிலையில், புஷ்பா தியேட்டர் சந்திப்பிலுள்ள பத்ரகாளியம்மன் கோவில் வாசலில் தஞ்சமடைந்ததாகவும் கூறுகிறார்.
கடந்த, 3 ஆண்டாக அவர் மனைவி வசந்தா, பார்வை குறைபாடால் சிரமப்பட்டு வருகிறார்.
முதுமையில் தனிமை எவ்வளவு கொடியது என்பது முதியவர் விருதகிரியின் வார்த்தைகளில் அதன் வலி புரிகிறது.