/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அன்பர் அனைவருக்கும் அருள்பவர் முருகப்பெருமான்'
/
'அன்பர் அனைவருக்கும் அருள்பவர் முருகப்பெருமான்'
ADDED : ஜூலை 22, 2025 11:09 PM

திருப்பூர்; 'தனது தாள் பணியும் அன்பர்கள் அனைவருக்கும், முருகப்பெருமான் அருள் புரிவார்' என, ஆன்மிக சொற்பொழிவாளர் பூர்ணிமாதேவி பேசினார்.
கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில், திருப்பூர், யுனிவர்சல் ரோட்டிலுள்ள ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், வாரந்தோறும் செவ்வாய்கிழமை, ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில், சொற்பொழிவாளர் கோவை பூர்ணிமாதேவி பேசியதாவது:
குமரக்கடவுள் மீது தீராத பக்தி செய்தவர், பாம்பன் சுவாமிகள். 19ம் நுாற்றாண்டில் வாழ்ந்து, முருகப்பெருமானின் பரிபூரண அருள் பெற்றவர். இவர், முருகப்பெருமான் மீது, பக்திப் பனுவல்கள் பல பாடி, முருகன் திருவடையை அடைந்த அருளாளர்.
சிவஞான தீபம், சைவ சமய சரபம், நாலாயிரப் பிரபந்த விசாரம் என பல்வேறு நுால்களை அருளியுள்ளார். 'இன்பக் கடல்படிந்த எந்தை அருணகிரி அன்புக்கு இசைந்தவனை ஆள உரை பொன்மயிலே' என்கிறார்.
அதாவது, இன்பமாகிய கடலில் மூழ்கிய, அருணகிரிநாத பெருமானது அன்புக்கு இணங்கின இறைவனை, தன்னையும் அடிமையாக ஏற்கும்படி பொன்மயிலை முருகனிடம் துாது அனுப்புவதாக பாடுகிறார்.
'என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினாரைத் தள்ளேன்' என்று, தமக்கு அருள் செய்த முருகப்பெருமான், அவன் தாள் பணியும் அன்பர்கள் அனைவருக்கும் அருள்புரிவார் என, பாம்பன் சுவாமிகள் உறுதி அளிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.