/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்லா நிலைகளிலும் பயன் தரும் தியானம்! பயிற்சி முகாமில் அறிவுறுத்தல்
/
எல்லா நிலைகளிலும் பயன் தரும் தியானம்! பயிற்சி முகாமில் அறிவுறுத்தல்
எல்லா நிலைகளிலும் பயன் தரும் தியானம்! பயிற்சி முகாமில் அறிவுறுத்தல்
எல்லா நிலைகளிலும் பயன் தரும் தியானம்! பயிற்சி முகாமில் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 09, 2025 07:10 AM

திருப்பூர்; ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில், மகளிருக்கான ஒரு நாள் சிறப்பு சத்சங்கம் மற்றும் மகளிர் தின விழா, திருப்பூர் ஸ்ரீராம்சந்த்ரா மிஷன் வளாகம், வைர விழா பூங்காவில் நடைபெற்றது.
மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த கருத்தரங்கிற்கு நீதிபதி மாலதி தலைமை வகித்தார்.
பல்லடம் பி.கே.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் இயக்குநர், டாக்டர் சுதா ஆனந்த் பேசியதாவது:
மருத்துவ படிப்பு முடித்த பின், எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று மருத்துவமனை துவங்கி, மருத்துவர் தொழில் செய்வது. மற்றொன்று, என் தந்தையின் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தை பொறுப்பெடுத்து நடத்துவது.மருத்துவ துறையை விட, அதிக சுதந்திரம் இருக்கும் என ஜவுளி தொழிலை தேர்வு செய்தேன். அதிலும் ஏராளமான சவால்கள். பல வேலைகள் இருக்கும். எதனை முதலில் முடிப்பது என்ற குழப்பம் ஏற்படும். அந்த குழப்பம், மன அழுத்தம், மன உளைச்சலுக்கு வழிவகுத்தது. என் பெற்றோரின் ஆன்மீக ஈடுபாடு காரணமாக, எனக்கும் சிறுவயது முதலே தியானத்தில் ஆர்வம் இருந்தது.
தியானம் வாயிலாக மனதை ஒருநிலைப்படுத்தி, நன்றாக படிக்க முடியும். நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வு குறித்த பயம் விலகும்.மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராவது, மிகக் கடினமாக இருந்தது. அந்த சமயம் ஏற்பட்ட மன அழுத்த பிரச்னைகளை எதிர்கொள்ள, தியானப் பயிற்சி கைகொடுத்தது. திருமணம் முடிந்து, கருவுற்ற போது மேற்கொண்ட கர்ப்ப கால தியான பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும் மிகவும் பயனளித்தது.
தியானப் பயிற்சி வாயிலாக, நேர்மறை அதிர்வலைகளைக் கொண்ட, ஒத்த கருத்துடைய, நம்பிக்கைக்குரிய ஒரு சமூகம் நம்மைச் சுற்றி உருவாகி இருப்பதை, நமது உணர்நிலை சமன்பாட்டிற்கு பக்கபலமாக இருப்பதையும் உணரலாம். ஒவ்வொரு நாளும் புத்துணர்வோடு துவங்குகிறது. சிரமங்கள், சவால்களை எதிர்கொண்டாலும் அன்றைய நாள் மனநிறைவுடன் முடிகிறது. மகிழ்ச்சியை விட, மன அமைதியும், நிறைவுமே முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஓமியோபதி டாக்டர் வரலட்சுமி, ஹார்ட்புல்னெஸ் பயிற்சியாளர் ரோஜாரமணி உள்ளிட்டோர் பேசினர்.

