/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்கலாம்
/
புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்கலாம்
ADDED : பிப் 06, 2025 10:56 PM
திருப்பூர்; மினி பஸ்களுக்கான புதுவிரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ள தமிழக அரசு, கட்டணங்களை மே 1ம் தேதி முதல் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே மாதம் அமலாகும் முன்பாக மினிபஸ் இயக்க தகுதியான, இதுவரை பஸ்கள் இயங்காத வழித்தடங்களை கண்டறிந்து, அவற்றில் புதிய மினி பஸ்கள் இயங்க ஒப்புதல் வழங்கும் படி ஆர்.டி.ஓ.,க்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் கூறியதாவது:
அனுமதிக்கப்பட உள்ள வழித்தடத்தின் நீளம், 25 கி.மீ. பஸ் புறப்படும் அல்லது நிறைவு பெறும் இடம் ஏதேனும் ஒரு கிராமமாக, குடியிருப்பாக இருக்க வேண்டும். வழியில் பஸ் ஸ்டாப் அல்லது ஏதேனும் ஒரு பஸ் ஸ்டாண்ட் இடம் பெற வேண்டும். பஸ் புறப்படும் இடத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரத்துக்குள் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கல்லுாரி, ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்கு முறை சந்தை, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ் பெற்ற வழிபாட்டு தலம் ஏதேனும் ஒன்று அருகில் இருக்கலாம்.
பழைய மினி பஸ் திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்களும், இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கான விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக அளித்து, அனுமதி கோரலாம். மினி பஸ் புதிய விரிவான திட்டத்தின், வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை பொதுமக்கள், தனியார் அமைப்பு, பஸ் உரிமையாளர்கள் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் அளிக்கலாம். வேறு வழித்தடங்களில் பஸ் இயக்க கருத்துகள் இருப்பின் தெரிவிக்கலாம். நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.