/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்டல பாசனத்தில் நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு! பெயரளவுக்கு அமைப்பதால் தொடரும் சிக்கல்
/
மண்டல பாசனத்தில் நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு! பெயரளவுக்கு அமைப்பதால் தொடரும் சிக்கல்
மண்டல பாசனத்தில் நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு! பெயரளவுக்கு அமைப்பதால் தொடரும் சிக்கல்
மண்டல பாசனத்தில் நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு! பெயரளவுக்கு அமைப்பதால் தொடரும் சிக்கல்
ADDED : ஜூலை 24, 2025 08:35 PM

உடுமலை: பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், பிரதான மற்றும் இதர கால்வாய்களில், தண்ணீர் திருட்டை தடுக்க, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீசாரை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவை முன்னதாகவே துவக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. திருமூர்த்தி அணையில் விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதற்காக, தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வாயிலாக நேற்று முன்தினம் முதல் தண்ணீர் பெறப்பட்டு இருப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு மண்டல பாசனத்துக்கான நீர் நிர்வாக பணிகளை பொதுப்பணித்துறையினர் துவக்கியுள்ளனர்.
விவசாயிகள் புகார் மண்டல பாசன காலத்தில், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் பிரதான கால்வாயில் பல்வேறு இடங்களில் தண்ணீர் திருட்டு நடக்கிறது. இக்கால்வாய், 120 கி.மீ., தொலைவு அமைந்துள்ள நிலையில், பொதுப்பணித்துறையின் பல்வேறு கோட்டங்களின் கீழ் பராமரிக்கப்படுகிறது.
ஆனால், அனைத்து பகுதிகளிலும், தண்ணீர் திருட்டு குறித்த தொடர் புகார்கள் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளாக, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.
அக்குழுவில், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீஸ் மற்றும் மின்வாரிய அதிகாரிகளை ஒருங்கிணைத்து, இக்குழு ஏற்படுத்தப்படும்.
குழுவினர் இரவு நேரங்களில் பிரதான மற்றும் இதர கால்வாய்களில் ரோந்து சென்று, தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், இலவச மின் இணைப்பு துண்டிக்கவும் பரிந்துரைக்கின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகளால், பிரதான கால்வாயில், பெரியளவிலான தண்ணீர் திருட்டுகள் தடுக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு நுாதன முறைகளில் இரவு நேரங்களில், பிரதான கால்வாயில் இருந்து தண்ணீரை திருடுகின்றனர்.
'கடந்த மூன்றாம் மண்டல பாசன காலத்தில், கண்காணிப்புக்குழு செயல்பாடுகள் திருப்பூர் மாவட்ட ஆயக்கட்டு பகுதியில், முழுமையாக இல்லை; பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டும், பெயரளவுக்கு அமைக்கப்பட்ட குழுவினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,' என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இம்முறை முறையாக குழுவை ஏற்படுத்தி, ஆலோசனை கூட்டம் நடத்தி ரோந்து செல்வதை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.
பிரதான கால்வாய் தண்ணீர் திருட்டு மற்றும் முறையற்ற நீர் நிர்வாகத்தால், பாசன திட்டத்தின் கடை மடையான வெள்ளகோவில் பகுதி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரதான கால்வாய் கண்காணிப்பை ஒரே கோட்டத்தின் கீழ் கொண்டு வந்து, தங்கள் பகுதி பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தவும் அரசை வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளனர். இதனால், இம்மண்டல பாசனத்தில் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வழக்கம் போல பெயரளவுக்கு குழு அமைக்கும் நடைமுறையை கைவிட்டு, நீர் நிர்வாகத்தை பாதுகாக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த மண்டல பாசனத்தில், பல்வேறு பிரச்னைகளுக்காக விவசாயிகள் போராட்ட களத்தில் இறங்குவதை தவிர்க்க முடியாது.