/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபத்தான நிலையில் நகராட்சி வணிக வளாகம்
/
ஆபத்தான நிலையில் நகராட்சி வணிக வளாகம்
ADDED : செப் 05, 2025 09:53 PM

உடுமலை,; உடுமலை நகராட்சி வணிக வளாகம், பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது.
உடுமலை தளி ரோடு, நகராட்சி அலுவலகம் அருகில், நகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு, ரேஷன் கடைகள், காஸ் ஏஜன்சிகள் மற்றும் தனியார் கடைகள் என, இரண்டு அடுக்குகளில், 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இக்கடைகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். அவர்கள் அங்குள்ள கடைகளில், பல்வேறு வகையான பொருட்களை வாங்குகின்றனர்.
ஆனால், அங்கு வணிக வளாகம் முறையாக பராமரிக்கப்படாமல், கட்டடங்கள் வலுவிழந்து காணப்படுகிறது. அவ்வப்போது, மேற்கூரை பல இடங்களில் உடைந்து விழுகிறது. இதை காணும் மக்கள் நகராட்சி கட்டடம் எந்நேரமும் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில், வணிக வளாக கட்டடங்கள் சிதிலமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. அதே போல், இங்குள்ள வணிக வளாகத்திலுள்ள கழிப்பிடம், பராமரிப்பின்றி, துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.
எனவே, வணிக வளாகத்தை புதுப்பிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், உடுமலை நகராட்சி பகுதியில், பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.