/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாறு ஓர் ஆலயம்: உருவான சரணாலயம்
/
நல்லாறு ஓர் ஆலயம்: உருவான சரணாலயம்
ADDED : நவ 17, 2025 01:23 AM

விவசாயம், தொழில் வளர்ச்சியில் மனித குல வளர்ச்சிக்கு, பல்லுயிர்ச் சூழல் முக்கியம்; இதை உருவாக்கும் ஆற்றல் பறவைகளுக்கே உண்டு. நுங்கும் நுரையுமாக அன்று பொங்கி வந்த நல்லாற்று நீரையும், அதன் கரைகளிலும் வளர்ந்திருக்கும் புல், புதர், செடி கொடிகளை வாழ்வாதாரமாக கொண்டும் எண்ணற்ற பறவையினங்கள் திருப்பூரில் வசித்தன. இன்று நல்லாறின் கோலம் மாறியிருக்கிறது.
இருப்பினும், நானுாறு ஏக்கர் பரப்பிலான நஞ்சராயன் குளம், இன்றளவும், நல்லாறு நீரால் நிரம்பி ததும்புகிறது. ஐநுாறு ஆண்டுகள் முன், பாசனத்துக்காக கட்டப்பட்டது இந்தக்குளம்; ஆண்டு முழுக்க நீர் வரத்து இருப்பதால், எண்ணற்ற உள்நாட்டு பறவைகள் அங்கு தஞ்சம் புகுந்தன. பல்லாயிரம் கி.மீ. கடல் கடந்து வெளிநாட்டுப் பறவைகளும் இங்கு வலசை வருகின்றன. இதுவரை, 192 வகை உள்நாட்டு பறவை, 45 வகை வெளிநாட்டு பறவைகள், நஞ்சராயன் குளத்துக்கு வந்து சென்றதாக கணக்கெடுப்பு சொல்கிறது.
பறவைகளின் வாழ்விடமாக இக்குளம் மாறியதன் விளைவு, கடந்த, 2022ல், தமிழகத்தின், 17வது பறவைகள் சரணாலயமாக, நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு உலகளவிய நாடுகளுக்கு இடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தப்படி, ஈர நிலத்திற்கான 'ராம்சர்' அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது, இந்திய அளவில், 85வது; தமிழக அளவில், 18வது 'ராம்சர்' நிலம் என்பது சிறப்பு.\
பறவைகள் சரணாலயமாகத் திகழும் நஞ்சராயன் குளம்.

