/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லுார் கோவில் தேர்கள் 30ம் தேதி வெள்ளோட்டம்
/
நல்லுார் கோவில் தேர்கள் 30ம் தேதி வெள்ளோட்டம்
ADDED : ஏப் 28, 2025 05:59 AM

திருப்பூர் : நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர் வெள்ளோட்டம், வரும் 30ம் தேதி நடக்கிறது.
திருப்பூர், நல்லுாரில் உள்ள, 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்காக சோமாஸ்கந்தர் தேர் பெரிதாகவும், விநாயகர் தேர் சிறிய அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய தேர் வெள்ளோட்டம், நாளை மறுநாள் (30ம் தேதி) நடக்கிறது.
வெள்ளோட்ட நிகழ்ச்சியை, திருவிழாவாக கொண்டாட, முருகேசன் தலைமையிலான அறங்காவலர் குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வரும், 29ம் தேதி மாலை, விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்குகிறது. முதல்கால வேள்வி பூஜையும், 30ம் தேதி காலை 6:00 மணி முதல், 7:25 மணிக்குள், இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. காலை, 9:00 மணி முதல், 10:00 வரை, புதிய தேருக்கு கும்பாபிேஷகமும், மகாதீபாராதனையும் நடக்கிறது.
மாலை, 4:00 மணிக்கு, புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00 மணி முதல், கயிலாய சிவ வாத்தியம், பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளையின் கும்மி நிகழ்ச்சி, ஆதன் பொன் செந்தில்குமார் குழுவினரின் பெருஞ்சலங்கையாட்டம், கம்பத்தாட்டம், அம்மன் கலைக்குழுவின் ஒயிலாட்டம், திருப்பூர் நண்பர்கள் குழு சார்பில், காவடியாட்டம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

