/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச இசை கருவிகள் வழங்க வேண்டும்; கலெக்டரிடம் நாதஸ்வரம் - தவில் கலைஞர்கள் மனு
/
இலவச இசை கருவிகள் வழங்க வேண்டும்; கலெக்டரிடம் நாதஸ்வரம் - தவில் கலைஞர்கள் மனு
இலவச இசை கருவிகள் வழங்க வேண்டும்; கலெக்டரிடம் நாதஸ்வரம் - தவில் கலைஞர்கள் மனு
இலவச இசை கருவிகள் வழங்க வேண்டும்; கலெக்டரிடம் நாதஸ்வரம் - தவில் கலைஞர்கள் மனு
ADDED : செப் 18, 2025 11:34 PM

திருப்பூர்; தமிழக அரசு, நாதஸ்வரம், தவில் இசை கருவி களை இலவசமாக வழங்கி, கைகொடுக்கவேண்டும் என, நான்கு மாவட்ட இசை கலைஞர்கள் திருப்பூர் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்கள் 2 ஆயிரம் பேரை உறுப்பினராக கொண்டு சரஸ்வதி துணை நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்கள் நல சங்கம் செயல்பட்டுவருகிறது.
இச்சங்க தலைவர் ஆண்டவர் தலைமையில், நான்கு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் நாதஸ்வரம் - தவில் கலைஞர்கள் 50 பேர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நாதஸ்வரம் வாசித்தும், தவில் இசைத்தபடி மனு அளிக்க வந்தனர்.
கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம், மனு அளித்த பின், இசை கலைஞர்கள் கூறியதாவது: தலைமுறை தலைமுறையாக, தவில், நாதஸ்வரம் இசைத்து, பாரம்பரிய கலையை பாதுகாத்து வருகிறோம். காலப்போக்கில், இந்த தொழில் நலிவடைந்து வருவதால், இதனை நம்பியுள்ள இசை கலைஞர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கி செல்கின்றனர். பெரும்பாலான இசை கலைஞர்கள் வாடகை வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். தமிழக அரசு, இசை கலைஞர்களுக்கு இலவச வீடு கட்டித்தரவேண்டும்.
நாதஸ்வரம், 12 ஆயிரம் ரூபாய்க்கும், தவில் 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எல்லா கலைஞர்களாலும், இந்த தொகை கொடுத்து இசை கருவிகள் வாங்க முடிவதில்லை.
நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் வாயிலாக, மிக குறைந்த எண்ணிக்கையிலான கலைஞர்களுக்கே இசை கருவிகள் வழங்கப்படுகிறது. 60 கலைஞர்கள் விண்ணப்பித்த நிலையில், வெறும் 15 பேருக்கு மட்டுமே இலவச இசை கருவி வழங்கப்பட்டது.
விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும், தவில், நாதஸ்வரம் இசை கருவிகளை இலவசமாக வழங்கவேண்டும். கூட்டுறவு சங்கங்களில், கலைஞர்கள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தற்போது, தமிழகம் முழுவதும் பஸ்களில், பாதி கட்டணத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இசை கலைஞர்களுக்கு, பயண கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கவேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, நான்கு மாவட்ட கலெக்டர்களிடமும் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அவ்வகையில் இன்று (நேற்று) திருப்பூர் கலெக்டரிடம் மனு அளிக்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.