/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கையின் ஆகச்சிறந்த மழைநீர் வடிகால்
/
இயற்கையின் ஆகச்சிறந்த மழைநீர் வடிகால்
ADDED : நவ 25, 2025 06:07 AM

'இயற்கை உருவாக்கிய மிகச்சிறந்த மழைநீர் வடிகாலான நல்லாறு மீட்பு என்பது, காலத்தின் அவசியம்' என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
கடந்த, 10 ஆண்டுக்கு முன் நல்லாறு தொடர்பாக ஆவணப்படம் இயக்கி, பள்ளிகள் தோறும் வெளியிட்ட எழுத்தாளர் கோவை சதாசிவம் கூறியதாவது;
நல்லாறு என்பது தென்மேற்கு மற்றும் வட கிழக்குப்பருவ மழை காலங்களில், குருடிமலை அடிவாரத்தில் உள்ள சிற்றுார், குன்னத்துார், கருவலுார், சேவூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு சமவெளி சிற்றுார்களில் மழைக்காலங்களில் வடியும் நீரை, ஒருமுகப்படுத்தி, ஒரு ஒழுங்கோடு சில கி.மீ., துாரம் பயணிக்கிற மிகச்சிறந்த மழைநீர் வடிகால் அமைப்பு; இது, இயற்கையால் தோற்றுவிக்கப்பட்டது.இந்த ஆற்றின் ஒரு பகுதி, தெக்கலுார் பகுதியில் 'வண்ணாறு' என்ற பெயரில், தெக்கலுாரில் உள்ள சிறு, சிறு ஊர்களின் வழியாக பாய்ந்து, மங்கலம் அருகே நொய்யலில் கலக்கிறது. இன்னொரு பகுதி, அவிநாசி தாமரைக்குளத்தை நிரப்பி, பூண்டி வழியாக கடந்து செல்கிறது. அவிநாசி, பூண்டி ஆகியவையும் அக்காலத்தில், வானம் பார்த்த வறண்ட பூமி தான். அங்கு நிலத்தடி நீரை மேம்படுத்தியதில் நல்லாறு முக்கியப் பங்காற்றுகிறது.
அறிவியல் அணுகுமுறை
--------------------
திருமுருகன்பூண்டி போயம்பாளையம், அங்கேரிபாளையம் வழியாக, 800 ஆண்டுகளுக்கு முன், விஜயநகர பேரரசு காலத்தில், மிக நேர்த்தியாக கட்டப்பட்ட, 480 ஏக்கர் பரப்பளவிலான நஞ்சராயன் குளத்தில் கலக்கிறது. சுற்றியுள்ள கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய தேவைக்கான நீராதாரமாகவும், கால்நடை வளர்ப்புக்கும் இந்த நீர் பயன்பட்டது; சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீராதாரமாகவும் இருந்தது.இக்குளத்தில் பன்னெடுங்காலமாக ஆண்டின், ஆறேழு மாதங்களுக்கு நன்னீர் மட்டுமே தேங்கி நின்றதால், பறவைகள், நீர்வாழ் தாவாரங்கள் என, சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாக நஞ்சராயன் குளம் விளங்கியது.
நல்லாறு பாதுகாப்பு என்பது, மிகச்சிறந்த விழிப்புணர்வு. இதன் வாயிலாக நாம் ஒரு ஆற்றை காப்பாற்றுகிறோம் என்பதை காட்டிலும், மிகச்சிறந்த மழைநீர் வடிகாலை காப்பாற்றுகிறோம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். நீர்வழித்தடத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர், செடி, கொடிகளால் நீர் மடை மாற்றம் செய்யப்படுகிறது. இதை, நிலவியல், நீரியியல் அணுகுமுறை வாயிலாக எதிர்கொள்ள வேண்டும். நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு, செடி, கொடி, புதர்கள் அகற்றப்பட வேண்டும்.
நல்லாறு தொடர்பான ஆவணப்படத்தை, பள்ளிகள் தோறும் வெளியிட்டோம்; விழிப்புணர்வுடன் நின்று போனதே தவிர, வேறெந்த பலனும் கிடைக்கவில்லை. 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான, அதன் நினைவாக இன்றும் நடுகல் வழிபாடு நடத்தப்படக் கூடிய நல்லாற்றை மீட்டெடுக்க நீர்வளத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசுத்துறையினர் முன்வர வேண்டும்; தேவையான ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும். நல்லாறு மீட்டெடுக்கப்படும் வரை, தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.------நாளை
நல்லாறு... பசுமை மறுசுழற்சி மண்டலமாகுமா?

