/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்கள்
/
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்கள்
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்கள்
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்கள்
ADDED : ஏப் 19, 2025 11:29 PM

திருப்பூர்: திருப்பூர், நல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகம் சமீபத்தில் நடந்தது. கோவில் அறங்காவலர் குழுவினர் முயற்சியால், தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் தேர்த்திருவிழா கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
சேலம் தம்பம்பட்டி தேர் ஸ்தபதி பொன் ரவி தலைமையிலான குழுவினர், தேக்கு, வேங்கை மற்றும் இலுப்பை மரங்களால், தேர் வடிவமைப்பு பணியை மேற்கொண்டனர்.
ஆறு சக்கரங்களின் மீது, 16 கோணங்களுடன், அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன், உயரமான பீடங்களுடன், தேர் திருப்பணி நிறைவு பெற்றுள்ளது. பூதவாகனங்கள் தாங்கும் தேரை, யாழி, சிம்மம், யானை உள்ளிட்ட வாகனங்கள் பல்வேறு திசையில் அலங்கரிக்கின்றன.
மீனாட்சி திருக்கல்யாணம், அம்மையப்பரை வழிபடும் நந்தியம்பெருமான், விநாயகர், முருகர், லிங்கம், நந்தி சிற்பங்கள் நிறைந்துள்ளன. சிவபெருமான், சுருட்டப்பள்ளி, ஸ்ரீபள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் மட்டுமே, சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.
சிவபெருமான் பள்ளி கொண்ட சிற்பமும், பாற்கடலின் மீது விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் கோலமும், தேரில் அமைந்துள்ளது.
அஷ்ட லட்சுமியர், விஷ்ணு அவதாரங்கள், குருமுனிவர்கள், தேவாரம் பாடிய மூவர், மாணிக்கவாசகர் சிற்பங்கள், ரிஷிகள் என, 180 சிற்பங்கள் தேரில் அமைந்துள்ளன. மொத்தம், 15 டன் எடையுடன் கூடிய தேர், கலசம் வைக்கும் போது, 29 அடி உயரம் இருக்கும். தேரில்,132 வெண்கல மணிகள் பொருத்தி, ஆகம விதிகளின் படி உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் தேர், எண்கோண வடிவில், 75 சிற்பங்களுடன், கலசத்துடன், 16 அடி உயரத்தில் இருப்பது போல் வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.
தேர்த்திருப்பணி நிறைவு பெற்று, வரும், 30ம் தேதி வெள்ளோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னேற்பாடுகளை, கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழு தலைவர் முருகேசன், அறங்காவலர்கள் சிவக்குமார், ஜெகதீசன், பிரியா கனகராஜ், அன்னபூரணி ஆகியோரும் செய்து வருகின்றனர். 29ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தி மற் றும் முதல்கால வேள்வி பூஜை, 30ம் தேதி காலை, விநாயகர் வழிபாட்டுடன், 2ம் கால வேள்வி பூஜை நடைபெறும்.
தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, புதிய தேருக்கு கும்பாபிேஷகமும், மாலை, 4:00 மணிக்கு, வெள்ளோட்டம் நடைபெறுகிறது.
தேவையில்லாத பகுதியை நீக்கினாலே, சிற்பம் தயாரிப்பது எளிதாகி விடுகிறது. எது தேவையில்லாத பகுதி என்பதை கண்டறியும் ஆற்றல் வேண்டும் என்கின்றனர் சிற்பத் தொழிலாளர்கள். நல்லுார் கோவிலுக்கு தேர் செய்யும் பணியில் சேலம் தம்பம்பட்டி தேர் ஸ்தபதி ரவி தலைமையில் 12க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆறு மாதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது:
சிற்பத்தில் முகம்தான் மிக முக்கியம்; நேர்த்தியா முகம் வைக்க தெரிஞ்சா, சிற்ப வேலைக்கு முழு அளவில் தயாராகிவிட்டதா அர்த்தம்.
குறைஞ்சது ரெண்டு வருஷம் வேலையைத் தொடர்ந்தாதான் முழுசா வேலை பழக முடியும். மரசிற்பம், வீட்டு உபயோக அழகுசாதன பொருள், கோவில் கதவு என, பல்வேறு வேலைப்பாடுகள் உள்ளன. அந்தக்காலத்துல, புளிய மரத்துல செஞ்ச கொட்டாப்பிடியை வச்சுத்தான், உளியில அடிச்சு, சிற்பம் செய்வோம்.
இப்ப, 'பைபர்' கட்டையை கொட்டாப்பிடியா பயன்படுத்தறோம். மொத்தம் 48 வகை உளிகள் இருக்கு. எந்தெந்த வேலைக்கு, எந்த உளியை பயன்படுத்தணும்னு தெரிஞ்சா தான், முழு சிற்பியா மாற முடியும்!
தமிழ்நாட்டில பெரிய தேர், திருவாரூர் ஆழித்தேர்தானுங்க. அடுத்ததாக அவிநாசியில இருக்கற தேர். தேர் செய்யற வேலை மட்டுமல்ல, தேர் பராமரிப்பு வேலை, கோவில் கதவு பராமரிப்புன்னு வேலை இருக்கும். ஆர்டர் இல்லாத நேரத்துல, மரசிற்பம் செஞ்சு கொடுக்கற வேலையை கவனிப்போம்.
பல தலைமுறைக்கும், லட்சக்கணக்கான மக்கள் வழிபடும் தேர்களை உருவாக்குவது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. உண்மையாக சுவாமி மீது பக்தி வச்சு செஞ்சா மட்டும்தான், மரசிற்பம் தத்ரூபமாக அமையும்.

